மனித இனத்திற்கே சாபக்கேடு! பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்!! கொந்தளிக்கும் அமித் ஷா!
பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஒரு சாபக்கேடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2008 நவம்பர் 26-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் வந்த 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பை நகரைத் தாக்கியதில் 166 உயிர்கள் பலிகொண்ட கொடூர நினைவு நாள் இன்று. 16 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் இன்னும் ரத்தம் சொட்டும் வலியாக இருக்கும் அந்த தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், “2008-ம் ஆண்டு இதே நாளில் பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கி, மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான செயலை நிகழ்த்தினர். தாஜ் மஹால் ஹோட்டல், ஒபராய் டிரைடெண்ட், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், நரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் அப்பாவி மக்களை கொன்று குவித்தனர்.
60 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தக் கோர சம்பவத்தில் 166 உயிர்கள் பறிபோயின. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும், போலீஸ் வீரர்களுக்கும், என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கும் எனது மரியாதை நிறைந்த அஞ்சலி” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்! மம்தா எதிர்ப்புக்கு அமித்ஷா தரமான பதிலடி
மேலும் அவர், “மும்பை மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் துச்சம் செய்து போராடிய துணிச்சலான போலீஸ் அதிகாரிகள், என்எஸ்ஜி வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் என்றும் நன்றி. மும்பை பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்ட விதம் உலகிற்கே உதாரணம்” என்று புகழாரம் சூட்டினார்.
பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த மனித இனத்திற்கே எதிரான அச்சுறுத்தலாக வரையறுத்த அமித்ஷா, “பயங்கரவாதம் ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த மனித இனத்துக்கே ஒரு சாபக்கேடு. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை, எந்த எல்லையும் இல்லை. அதை முழுமையாக ஒழிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு காட்டும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையையும் உறுதியான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் முழுவதும் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு உலகளாவிய ஆதரவு கிடைத்திருக்கிறது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
காஷ்மீரில் இருந்து செக்ஷன் 370 நீக்கம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த அமைப்புகளைத் தடை செய்தது, தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் கடுமையான நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை நாடு கடத்தும் ஒப்பந்தங்கள் என மோடி அரசின் 10 ஆண்டு கால பயங்கரவாத எதிர்ப்பு சாதனைகளை மறைமுகமாக நினைவூட்டும் வகையில் அமித்ஷாவின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
இதற்கிடையில், மும்பையில் தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் உள்ளிட்ட தாக்குதல் நடந்த இடங்களில் இன்று காலை முதலே மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், துகாராம் ஓம்ப்ளே, ஹேமந்த் கர்கரே, அசோக் காம்டே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட வீரர்களுக்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் அமித்ஷா!! பாஜக நிர்வாகிகள் கலக்கம்!! 2026ல் யாருக்கு சீட்?!