×
 

ஆந்திராவில் பேருந்து தீ விபத்து: பறிபோன 20 பேரின் உயிர்..!! வெளியான பகீர் காரணங்கள்..!!

ஆந்திரா கர்னூலில் 20 பேர் பலியான பேருந்து தீ விபத்துக்கான காரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தெலங்கானாவின் ஹைதரபாத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி 44 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து கர்னூல் அருகே விபத்தில் சிக்கியது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நேராக வந்து மோதிய இரு சக்கர வாகனம் பேருந்தின் கீழ் சிக்கி, அது சுமார் 100 அடி தூரம் வரை இழுக்கப்பட்டது. இந்த மோதலில் இரு சக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் உராய்ந்து, தீப்பொறிகள் பறந்தன. அவை பேருந்தின் எரிபொருள் டேங்கைத் தொட்டு, உடனடியாக பெரிய தீயை ஏற்படுத்தின. அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் தீ பரவியதால், அவர்கள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் கருகி இறந்தனர். 19 பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்கள் முழுமையாகக் கருகியிருந்ததால், DNA சோதனைகள் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.

பேருந்து மீது மோதிய இரு சக்கர வாகனம் பேருந்தின் எஞ்ஜினுக்கு கீழே சிக்கிக் கொண்ட ஏற்பட்ட தீப்பொறி காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த விபத்திற்கு வேறு ஒரு காரணம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தீ விபத்திற்கு ஆளான பேருந்தில் பயணித்த மங்காநாத் என்ற வியாபாரி, இந்த பேருந்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 234 புதிய செல்போன்கள் அடங்கிய பார்சலை பெங்களூருக்கு பார்சலாக அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திரா பேருந்து தீ விபத்தில் பகீர் திருப்பம்... லக்கேஜ் கேபினில் மறைந்திருந்த மர்மம்... தடவியல் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!

விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் தீ பற்றியதும் அது மளமளவென பரவியது. அப்போது, பேருந்தில் இருந்த 234 செல்போன்கள் அடங்கிய பார்சலில் தீ பரவியதும் செல்போன்களில் இருந்த பேட்டரிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், பேருந்தில் தீயின் வேகம் மளமளவென பரவியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. 20 பயணிகளின் உயிரைப் பறித்த இந்த தீ விபத்தில் தொடர்புடைய இரு பைக் பயணிகள் குடிபோதையில் இருந்ததை ஆந்திரப் பிரதேச காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த சிவசங்கர் மற்றும் எரி சுவாமி ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்ததாக தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தினர் என்று கர்னூல் சரக துணை காவல் ஆய்வாளர் (டிஐஜி) கோயா பிரவீன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணையின்படி, விபத்தில் ஈடுபட்ட இருசக்கர எரி சுவாமி என்ற இளைஞன், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியிருந்தார். சமூக ஊடகங்களில் வைரலான கண்காணிப்பு கேமரா காட்சிகள், அவர் மது அருந்திய நிலையில் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதை வெளிப்படுத்துகின்றன. தடயவியல் நிபுணர்கள் அளித்த அறிக்கை, அவரது இரத்தத்தில் உயர் அளவு ஆல்கஹால் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. "இருசக்கரம் சறுக்கியதால் பேருந்துடன் மோதல் ஏற்பட்டது. இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, உடன் வந்த சுவாமி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். போதை நிலையில் இருந்ததே இந்த வியாபித்துக்கு முக்கிய காரணம்" என கர்னூல் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் பேருந்து தீ விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் "பயங்கரவாதிகள்" என்றும், அவர்களுக்கு "கருணை காட்டப்படாது" என்றும் நகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த விபத்து, சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

இதையும் படிங்க: ஆசிய ஓட்டப்பந்தய போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனை... வாழ்த்துக்களை அள்ளித் தெளித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share