×
 

வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 21 பேர் பலியான சம்பவத்தில், கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி: தெற்கு டெல்லி மாள்வியா நகர் ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி’ என்ற ஆறு மாடி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 8:45 மணியளவில் விடுதியின் உணவகத்தில் திடீரென தீ பிடித்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென முழு கட்டடத்துக்கும் பரவியது. வெளிநாட்டினர் உட்பட 70க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்தனர். அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களும் இந்த விடுதியில் தங்கியிருந்தனர்.

தீ பரவியதும் அறைகளில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் திணறினர். பலர் மயங்கி விழுந்தனர். உள்ளூர் மக்களும் அருகிலுள்ள மெத்தை கடைக்காரர்களும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். மெத்தைகளை விரித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் இருந்தவர்கள் கீழே குதித்தனர். மூன்றாவது மாடியில் இருந்த ஒரு பெண் தன் குழந்தையுடன் குதித்தபோது மெத்தையில் விழுந்து உயிர் தப்பினர்.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 60க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 21 பேர் வழியிலேயே உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர். மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விடுதியில் நுழைய ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 21 பேர் பலியான வழக்கில் கட்டட உரிமையாளர் லாவ்கேஷ் பஜாஜை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்துக்குப் பின் தலைமறைவான அவரை லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து தேடி வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share