சிவசேனாவில் ஆபரேசன் டைகர்!! உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே அணியில் ஐக்கியம்!
மஹாராஷ்டிராவில், ஆபரேஷன் டைகர் என்ற பெயரில் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் மேற்கொண்ட முயற்சியில், உத்தவ் தரப்பு எம்.பி.,க்கள் 6 பேர் கட்சி மாறினர்.
மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு மாறியுள்ளனர். ‘ஆபரேஷன் டைகர்’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பாஜக மற்றும் ஷிண்டே தரப்பினர் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்துள்ளது.
சிவசேனா கட்சி சில ஆண்டுகளுக்கு முன் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே பிளவுபட்டது. இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என உரிமை கொண்டாடினர். இறுதியில் தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்பை ஒரிஜினல் சிவசேனாவாக அங்கீகரித்தது. லோக்சபா தேர்தலில் உத்தவ் தரப்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் சட்டசபை தேர்தலில் ஷிண்டே - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் உத்தவ் தரப்பு எம்.பி.க்களில் 6 பேர் ஷிண்டே பக்கம் தாவியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இந்த கட்சி மாற்றம் பற்றிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அரசல்புரசலாக இருந்து வந்தது. இன்று இது வெளிச்சத்துக்கு வந்தது. 6 எம்.பி.க்களும் ஏக்நாத் ஷிண்டே உடன் ஒரே மேடையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தாங்கள் ஒரிஜினல் சிவசேனாவில் இணைந்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!
இந்த நடவடிக்கைக்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தாவல் சட்டப்படி அவர்களின் எம்.பி. பதவிகளைப் பறிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தவ் அணி எச்சரித்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
ஷிண்டே தரப்பினர் இந்த மாற்றத்தை பெரும் வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். உத்தவ் தரப்பில் இருந்து 6 பேர் விலகியதால், அவர்களின் பலம் கணிசமாகக் குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடைபெறும் அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் சிவசேனாவின் உள் பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு தங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த ஆபரேஷன் டைகர் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே தரப்போ இந்த மாற்றத்தை ‘விலைக்கு வாங்கப்பட்ட துரோகம்’ என விமர்சித்து வருகிறது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!