70 வயதில் 702 கி.மீ சைக்கிள் பயணம்! பாஜ எம்எல்ஏ அசத்தல்!! போன் போட்டு பாராட்டிய மோடி!
கர்நாடகாவின் ராஜாஜிநகர் தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுரேஷ்குமார். வயது 70. கடந்த டிசம்பர் 23-ல் அவர் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் தொடங்கினார்.
பெங்களூரு: வயது 70ஐ எட்டியும் உடல் தகுதியை இழக்காமல், கர்நாடகாவின் ராஜாஜிநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ எஸ். சுரேஷ்குமார் அற்புதமான சாதனை படைத்துள்ளார். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர், வெறும் 5 நாட்களில் சுமார் 37 மணி நேரம் மிதித்து 702 கிலோமீட்டர் தொலைவை கடந்து இலக்கை எட்டினார். இந்த பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டே இதே பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்த சுரேஷ்குமார், சிக்குங்குனியா நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார். அதனால் பயணத்தை ஒத்திவைத்த அவர், மீண்டும் உடல் தகுதி பெற்ற பிறகு தற்போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
1975ஆம் ஆண்டு, தனது இளமைக்காலத்தில் நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் சென்ற நினைவை மீட்டும் வகையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பயணத்தை மேற்கொண்டார். இம்முறை 15 நண்பர்களுடன் சென்ற அவர், விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தரிசனம் செய்து பயணத்தை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: நீங்க சொன்னா செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க... இனிமே இப்படி செய்யாதீங்க..! வைகோவிற்கு அன்பு கட்டளையிட்ட முதல்வர்...!
இந்த சாதனை குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, எம்எல்ஏ சுரேஷ்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். “சுரேஷ்குமாரின் சைக்கிள் பயணம் உத்வேகம் அளிக்கிறது.
அவரது உறுதியும் மனோபலமும் வியக்க வைக்கிறது. உடல் தகுதியின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. அவருக்கு வாழ்த்துகள்” என்று பிரதமர் மோடி கூறினார். இந்த பாராட்டு சுரேஷ்குமாருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
வயது முதிர்ந்த நிலையிலும், நோயில் இருந்து மீண்டு இத்தகைய சவாலை ஏற்று வென்ற சுரேஷ்குமாரின் பயணம், உடல் நலத்தை பேணுவதன் அவசியத்தை பலருக்கு உணர்த்தியுள்ளது. இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உதாரணமாக திகழும் இந்த சாதனை, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 82 வயதா? 28 வயதா? வைகோவின் நெஞ்சுரத்தை பாராட்டிய ஸ்டாலின்! நடைபயணம் துவக்கிவைப்பு!