×
 

80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நாட்டு மக்களுக்குப் புரட்சிகர சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  

நாட்டின் 80-வது விடுதலைத் திருநாளை முன்னிட்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சிகரமான சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், மகாகவி பாரதியாரின் 'தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? இப்பயிரை கண்ணீராற் காத்தோம்' என்ற வரிகளை நினைவு கூர்ந்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும், சிறைக்கொடுமைகளையும் சித்ரவதைகளையும் இன்முகத்தோடு எதிர்கொண்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் விடுதலைப் போரில் முழு விடுதலை என முதலில் முழங்கியதோடு, மொழிவழி மாநிலங்கள் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க சமரசமின்றிப் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும், சுதந்திரப் போராட்டத்துடன் மண்ணுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் நலன், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நீதியை இணைத்துக் களமாடிய பெருமை பொதுவுடைமை இயக்கத்திற்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

தொடர்ந்து ஒன்றிய அரசை விமர்சித்துள்ள அவர், விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்ற சக்திகளின் பிடியில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுவதாகவும், நாட்டின் தற்சார்பு அயலுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் வகையில் மாற்றப்பட்டு வருவதாகவும் சாடியுள்ளார். அன்று நம் முன்னோர்கள் உப்புச் சத்தியாகிரகம் நடத்திய நிலையில், இன்று விவசாயிகளின் விதை உரிமையைக் கூட பன்னாட்டு நிறுவனங்களிடம் மோடி அரசு அடகு வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், வேலையின்மை, வறுமை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.  

ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி போன்ற அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாக்கவும், போராட்டங்கள் மூலமாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை உணர்ந்து, தியாகிகளின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய சமத்துவ சமூகத்தை உருவாக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம் என பெ. சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.  

 

 


 

இதையும் படிங்க: "காவி கொடி வேண்டாம், தேசியக் கொடி தாருங்கள்" -  பாஜக நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமித் ஷா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share