அகமதாபாத் விமான விபத்து! விமானியின் திட்டமிட்ட செயலா? இத்தாலி பத்திரிகை புகாருக்கு இந்தியா பதில்!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஊகங்களே என்றும் AAIB விளக்கமளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதியது.
இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் குழுவினர் உட்பட 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இறுதி விசாரணை அறிக்கை வெளியாகவில்லை.
ஜூலை மாதம் வெளியான ஆரம்பகட்ட அறிக்கையில், விமானத்தின் எரிபொருள் ஸ்விட்சுகள் திடீரென அணைக்கப்பட்டதால் இரு என்ஜின்களும் செயலிழந்ததே விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்தது. தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வால் விபத்தில் உயிரிழந்தார். சமீபத்தில் இத்தாலிய நாளிதழ் 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!
அதில், “விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் எரிபொருள் ஸ்விட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இது தற்செயலான தவறல்ல, திட்டமிட்ட செயல். வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் தரவுகளின்படி கேப்டன் சுமித் சபர்வால் என்ஜின்களை அணைத்ததாக தெரிய வருகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்துக்கு ஒரு மாதத்துக்குப் பின் தெரிய வந்தது. போயிங் 787 ரக விமானத்தில் இரு என்ஜின்களும் ஒரே நேரத்தில் தானாக செயலிழப்பது சாத்தியமில்லை” என்று கூறப்பட்டது.
அமெரிக்க ஊடகங்களும் விமானி வேண்டுமென்றே ஸ்விட்சை அணைத்தார் என்று செய்தி வெளியிட்டன. இந்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
“அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் பல செய்திகள் ஊகங்கள் மட்டுமே. இறுதி அறிக்கை வெளியாகும் வரை எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று AAIB அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப் பெரிய உயிரிழப்புகளில் ஒன்றாகும். விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை குடும்பத்தினரும், பொதுமக்களும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
AAIB-இன் இந்த விளக்கம் ஊக செய்திகளை அடக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இறுதி அறிக்கை எப்போது வெளியாகும் என்பது இன்னும் தெரியவில்லை. விமானப் பாதுகாப்பு, விமானிகளின் மனநலம், தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவை தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: ரூ. 15,000 கோடி நஷ்டம்!! அகமதாபாத் விமான விபத்தால் தத்தளிக்கும் ஏர் இந்தியா! ஆண்டறிக்கையில் தகவல்!