இனி AI தெரிந்தவர்களுக்குத்தான் டிமாண்ட்? இந்திய வேலை சந்தை குறித்து ஆய்வில் வெளியான தகவல்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், இந்தியாவில் வேலை இழப்புகளை காட்டிலும் வேலை வாய்ப்புகளே அதிகரித்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற அச்சமும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஏஐ காரணமாக வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட, புதிய வேலைவாய்ப்புகளை பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவை மற்றும் முதலீட்டு வங்கி நிறுவனமான நோமுரா ஹோல்டிங்ஸ், ஆசிய நாடுகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் அந்த காலகட்டத்தில் 31,921 பணிநீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சாட்பாட் உள்ளிட்ட தானியங்கி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் சில பணியிடங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு
அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்தியாவில் 83,100 பேர் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட புதிய வேலைவாய்ப்புகள் இரு மடங்குக்கும் அதிகமாக இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை தங்களது பணிகளில் பயன்படுத்தும் வகையில் திறன் பெற்ற ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா மட்டுமின்றி தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக நோமுரா தெரிவித்துள்ளது. பெரிய பொருளாதார நாடுகளிலும், தொழிலாளர் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இதேபோன்ற மாற்றங்கள் காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது.
இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பம் சில பாரம்பரிய பணிகளை மாற்றினாலும், அதே நேரத்தில் புதிய வகையான வேலைகளையும் உருவாக்கி வருவது தெரியவந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், எதிர்கால வேலை சந்தையில் எந்தெந்த பணிகள் அதிகரிக்கும், எந்தெந்த பணிகள் குறையும் என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தையும், ஊழியர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்வதையும் பொறுத்தே அமையும்.
இந்த நிலையில், ஏஐ வளர்ச்சியை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி, ஏஐ கருவிகளை திறம்பட பயன்படுத்தும் திறனும் எதிர்கால வேலைவாய்ப்பில் முக்கியமானதாக மாறக்கூடும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: Deepfake-க்கு செக்! இனி 36 மணி நேரம் இல்லை... வெறும் 3 மணி நேரம் மட்டும் தான்! ஏஐ போலி பதிவுகளுக்கு மரண அடி!