அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் இருக்கு..!! விரிவான விசாரணை தேவை..!! பகீர் கிளப்பிய மம்தா..!!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவருமான அஜித் பவார் இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் ஏற்பட்ட கொடிய விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்திற்காக பாராமதிக்கு சென்று கொண்டிருந்த அஜித் பவார், VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 16 வருட பழைய பாம்பெர்டியர் லியர்ஜெட் 45 விமானத்தில் பயணித்தார். காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட விமானம், 8.30 மணிக்கு முதல் தரையிறங்க முயன்றது. இருட்டு மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதையும் படிங்க: அஜித் பவார் மரணம்..!! VSR விமான நிறுவனத்தில் இது 2வது விபத்து..!! திடீரென முடங்கிய இணையதளம்..!!
பின்னர் 8.42 மணிக்கு இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது, 8.45 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்து, ஓடுபாதை அருகே மோதியது. விமானம் முற்றிலும் உருக்குலைந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்தன. அஜித் பவாரின் உடல் அவர் அணிந்திருந்த கடிகாரத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டது.
இந்த விபத்தால் நாடு முழுவதும் இரங்கல் அலைகள் எழுந்துள்ளன. பல்வேறு அரசியல் தலைவர்கள் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இச்சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அஜித் பவாரின் மரணம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. அரசியல் தலைவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பது வேதனை தருகிறது” என்றார்.
மேலும், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை சுட்டிக்காட்டிய அவர், “அஜித் பவார் பாஜகவிலிருந்து விலகி, சரத் பவாருடன் மீண்டும் இணைய இருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற புலனாய்வு அமைப்புகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன” என்று வலியுறுத்தினார்.
மகாராஷ்டிரா அரசு மூன்று நாட்கள் இரங்கல் தினமாக அறிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மம்தா பானர்ஜியின் கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!