டெக் துறையில் பரபரப்பு.. டிரம்ப்பின் H-1B விசா உத்தரவால் IT ஊழியர்களுக்கு பறந்த அவசர அறிவிப்பு..!!
H-1B விசா வைத்துள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய H-1B விசா உத்தரவு டெக் துறையை பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. இந்த உத்தரவு (செப்டம்பர் 21ம் தேதி), நாளை அதிகாலை 12:01 மணிக்கு (ஈஸ்டர்ன் டைம்) அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள், H-1B மற்றும் H-4 விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன.
டிரம்ப் வெளியிட்ட அரசாணையில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (தோராயமாக 88 லட்சம் ரூபாய்) கட்டணம் விதிக்கிறது. இது 12 மாதங்கள் அமலில் இருக்கும். இந்தக் கட்டணம், விசா தொடர்பான புதிய மனுக்களுக்கு மட்டும் பொருந்தும். ஆனால், அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் ஊழியர்கள், இந்தக் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் நாடு திரும்ப முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, H-1B திட்டத்தின் 'தவறான பயன்பாட்டை' தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறுகிறது. இது அமெரிக்க தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் என்று வணிகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அடடே.. இப்போ மும்பையிலுமா..!! அமேசானின் அசத்தல் மூவ்..!!
மைக்ரோசாப்ட், தனது உள்நாட்டு மின்னஞ்சலில், H-1B மற்றும் H-4 விசா வைத்திருக்கும் ஊழியர்களை "அடுத்தடுத்த காலங்களுக்கு அமெரிக்காவிலேயே இருக்குமாறு" அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள், செப்டம்பர் 21ம் தேதிக்கு முன் திரும்ப வேண்டும் என்று "வலியுறுத்தியுள்ளது".
இதேபோல், அமேசான், H-1B மற்றும் H-4 விசா ஊழியர்களை "12:00 AM EDT, செப்டம்பர் 21க்கு முன் அமெரிக்கா திரும்புமாறு" பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்கள் சர்வதேச பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இந்திய ஐடி தொழிலாளர்களை கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2022-2023இல் வழங்கப்பட்ட 4 லட்சம் H-1B விசாக்களில் 72% இந்தியர்களுக்கானது. அமேசான் 2025இல் 12,000க்கும் மேற்பட்ட H-1B விசாக்களைப் பெற்றுள்ளது, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா தலா 5,000க்கும் மேல். இந்த மாற்றம், நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தாங்கவைக்கலாம்.
குடியேற்ற வழக்கறிஞர்கள், இந்தியாவிலிருந்து நேரடி பயணங்கள் காலதாமதமாகலாம் என எச்சரிக்கின்றனர். ஜேபி மார்கன் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்புகளை வழங்கியுள்ளன. டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்திய டெக் சமூகம் பதற்றத்தில் உள்ளது. சட்ட சவால்கள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் திறமையான தொழிலாளர் இறக்குமதி கொள்கையில் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.
இதையும் படிங்க: கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!