×
 

NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

ஜனநாயக மற்றும் காந்திய வழியில் போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளைப் பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கியமான கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் காந்திய வழியில் அணுகி, அடக்குமுறைக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் Cockroach Janata Party (CJP) தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட மோதல் மற்றும் போலீஸ் நடவடிக்கை நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான் அன்னா ஹசாரே தனது கருத்துகளை பிரதமரிடம் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ஒரு துறையில் பெரிய அளவில் முறைகேடு அல்லது நிர்வாகத் தோல்வி ஏற்பட்டால், அதற்கான அரசியல் பொறுப்பை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பதவி விலகுவது அரசை பலவீனப்படுத்தாது; மாறாக நிர்வாகத்தில் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும், இது மற்ற அமைச்சர்களுக்கும் எச்சரிக்கையாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த CJP!‘தர்மேந்திர பிரதான் ராஜினாமாதான் தீர்வு’!போராட்டம் தீவிரம்!

மேலும், நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாக அன்னா ஹசாரே கவலை தெரிவித்துள்ளார். தேர்வு ரத்து, மறுதேர்வு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும், ஊடகங்களில் வெளியாகிய தகவல்களின்படி மாணவர் உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் பிரச்சினைகளை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், சமூக மற்றும் கல்வி நெருக்கடியாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையையும் அன்னா ஹசாரே தனது கடிதத்தில் விமர்சித்துள்ளார். போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்குப் பதிலாக, அரசின் பிரதிநிதிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, ஜனநாயக மற்றும் காந்திய வழியில் போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை அரசு பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியை அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கடிதம் தற்போதைய நீட் விவகாரத்தில் புதிய அரசியல் மற்றும் சமூக விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி பதற்றம் உச்சம்... NEET போராட்டம் எதிரொலி; 16 மெட்ரோ நிலையங்கள் 2-வது நாளாக மூடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share