Karur Stampede! எதுக்கு பதட்டப்படுறீங்க செந்தில்? அண்ணாமலை, அதிமுக நெருக்கடி! திணறும் திமுக!
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (அக்டோபர் 1) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததை, பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் அதிமுக கடும் விமர்சித்துள்ளனர். "ஆணையம் நடக்கும் போது ஊடக சந்திப்பு ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
செப்டம்பர் 27 மாலை, கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில், 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். 10,000 பேருக்கு அனுமதி இருந்தபோதிலும், விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள், 13 ஆண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: Karur Stampede! சிசிடிவி, ட்ரோன் ஆதாரங்கள் எங்கே?! த.வெ.க. நிர்வாகிகளை குறி வைக்கும் போலீஸ்!
51 பேர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று திரும்பினர். த.வெ.க. தரப்பினர், "காவல்துறை பாதுகாப்பு இல்லாததே காரணம்" என்று குற்றம் சாட்ட, தி.மு.க.வினர் "தவெக-வின் கூட்ட நிர்வாக குறைபாடு" என்று பதிலளித்தனர்.
தமிழக அரசு, ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. அவர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை சந்தித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய், ரூ.20 லட்சம் உதவி அறிவித்து, 2 வாரங்களுக்கு சந்திப்புகளை ஒத்திவைத்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அறிக்கையில், "கரூர் துயர சம்பவத்தில், தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை பரிந்துரைத்துள்ளது" என்று கூறினார். செந்தில் பாலாஜியின் செய்தியாளர் சந்திப்பை விமர்சித்து, "புதிய கதைகள் கூறுகிறார்.
த.வெ.க. சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. செருப்பு வீச்சு, கத்துக்குத்து ஆதாரங்கள் உள்ளன. விசாரணையில் த.வெ.க. வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்க/மறுக்க நீதிமன்றம் முடிவு செய்யும்" என்றார்.
"தேஜ கூட்டணி உண்மை அறியும் குழுவிடம் ஒரு பெண், கூட்டத்தில் கத்துக்குத்து நடந்ததாக கூறியுள்ளார். இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கையில், செந்தில் பாலாஜி ஊடக சந்திப்பில் 'வதந்தி' என்று கூற வேண்டிய அவசியம் என்ன? கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்துக்கு தகுதியான இடமா என்பதை விசாரிக்க ஆணையம் அமைத்துள்ளது.
அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்து திணிப்பு நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். "யார் சென்றார்கள்? செல்லவில்லை என்று கேட்க தகுதி தி.மு.க.வுக்கு இருக்கிறதா?" என்றும் கூறினார்.
அண்ணாமலை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் சம்பவத்தில் (66 உயிரிழப்பு) முதல்வர் ஸ்டாலின் செல்லாததை, தென்மாவட்ட மழைக்கு டில்லி சென்றதை குறிப்பிட்டு, "கரூருக்கு ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்" என்று விமர்சித்தார். "நீதிமன்றம், ஆணையம் விசாரிக்கும் போது, செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று கூறினார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கரூர் சம்பவத்துக்கு ஆணையம் அமைத்ததும், மின்வாரிய அதிகாரி, கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி. போன்றோர் செய்தியாளர் சந்திப்புகள் நடத்துகின்றனர். டி.ஜி.பி. பேட்டி கொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிடுகிறார். இப்போது செந்தில் பாலாஜி சந்திப்பு ஏன்?" என்று கூறியது. "இவ்வளவு பதற்றம், என்ன சொல்ல வருகிறார்கள்? ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்துகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியது.
"செந்தில் பாலாஜியின் பதற்றம், கரூரில் என்ன நடந்தது என்பதை சந்தேகப்பட வைக்கிறது. ஆணையத்துக்கு பின், அரசு அதிகாரிகள் வாதங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ஆணையத்தை அவமதிக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்" என்று விமர்சித்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் புகார்களுக்கு 8,000 வழக்குகள் பதிவு செய்ததை குறிப்பிட்டு, "தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் கொள்ளை நடக்கிறது. பாட்டிலுக்கு 10-40 ரூபாய் கொள்ளை, இப்போது 10 ரூபாய் ஸ்டிக்கர் வசூல்" என்று கூறியது. "பழனிச்சாமி '10 ரூபாய்' என்று சொன்னதும், 'பாலாஜி' என்று மக்கள் சொன்னது. அப்போது கள்ள மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, இப்போது 41 உயிரிழப்புக்கு பேசுகிறார். அரசின் அலட்சியத்தை மறைக்க மடைமாற்றும் அரசியல் தானா?" என்று கேள்வி எழுப்பியது.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் அரசியல் போட்டியை சூடாக்கியுள்ளன. விசாரணை ஆணையம், உண்மைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Karur stampede! விஜயின் அடுத்தக்கட்ட மூவ்! 3 நாள் ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!