×
 

இந்தியாவுக்கு தப்பி ஓடிய கொலை குற்றவாளிகள்!! வங்கதேச போலீசார் புதிய குற்றச்சாட்டு!

வங்கதேச மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஓஸ்மான் ஹாதி கொலை வழக்கில் தேடப்படும் இரண்டு முக்கிய குற்றவாளிகள், இந்தியாவின் மேகாலயாவுக்கு தப்பி சென்றுள்ளதாக வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய ஓஸ்மான் ஹாதியை கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் இருவர் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் பதுங்கியுள்ளதாக வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மேகாலயா எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கடுமையாக மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் ஓஸ்மான் ஹாதி. அவர் பார்லிமென்ட் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். 

கடந்த டிசம்பர் 12ஆம் தேதி பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஹாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: பிரியங்கா காந்தி மட்டும் பிரதமரா இருந்தா?! காங்., எம்.பிக்கள் சப்போர்ட்! ஓரம்கட்டப்படுகிறாரா ராகுல்காந்தி?!

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய வங்கதேச போலீசார், துப்பாக்கியால் சுட்டவர் பைசல் கரீம் மசூத், பைக் ஓட்டியவர் ஆலம்கீர் ஷேக் என்று அடையாளம் கண்டனர். இந்த இருவரும் மைமென்சிங்க் மாவட்டத்தில் உள்ள ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று மேகாலயாவின் துரா நகரில் பதுங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

குற்றவாளிகளுக்கு உதவிய புர்தி மற்றும் சமி ஆகியோரை இந்திய அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இவர்களை நாடு கடத்தி வர இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதுவரை ஹாதி கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 218 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலையும் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் வங்கதேச போலீசாரின் இந்தக் குற்றச்சாட்டை மேகாலயா எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் ஓ.பி. உபாத்யாய் மறுத்துள்ளார். “குற்றவாளிகள் மேகாலயாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறுவது தவறு. ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது. ஹலுவாகாட் பகுதி வழியாக யாரும் எல்லையைத் தாண்டி வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிஎஸ்எஃப் இதுபோன்ற சம்பவத்தை கண்டறியவும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் அரசியல் நிலைமை தொடர்ந்து பதற்றமாக உள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: வங்கதேச வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!! மதவெறுப்பை பரப்பினாரா? வங்கதேச போலீஸ் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share