மினிமம் பேலன்ஸ் இல்லையா..?? டோன்ட் வொர்ரி.. நிர்மலா சீதாராமன் சொன்ன 'குட்' நியூஸ்..!!
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள தகவல், பலருக்கு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்துள்ளது.
நாட்டில் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Average Balance - MAB) பராமரிக்கத் தவறியதற்காக விதிக்கப்படும் அபராதங்கள் பலருக்கு தொல்லையாக இருந்து வருகின்றன. குறிப்பாக சாமானிய மக்கள், "கணக்கில் இருக்கும் சொற்ப தொகையையும் வங்கி பிடுங்கிவிடுமோ?" என்ற அச்சத்தில் இருப்பது வழக்கம். ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் இத்தகைய கவலைகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (Basic Savings Bank Deposit Accounts - BSBDAs) உள்ளன. இதில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளும் அடங்கும். இந்தக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கத் தவறியதற்காக எந்த அபராதமும் வசூலிக்கப்படுவதில்லை. அதாவது, இவை முழுமையான ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக செயல்படுகின்றன.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!
பணம் இல்லாவிட்டாலும் வங்கி ஒரு பைசா கூட பிடிக்காது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், வங்கிச் சேவைகளை எட்டாத அடித்தட்டு மக்கள் மற்றும் சிறு சேமிப்பாளர்களை வங்கி முறைக்குள் கொண்டு வருவதுதான். மறுபுறம், வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் பொறுத்தவரை நிலைமை வேறு. கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2022-23 முதல் 2024-25 வரை) பொதுத்துறை வங்கிகள் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததால் ₹8,092.83 கோடி அபராதம் வசூலித்துள்ளன.
ஆனால், இத்தொகை பொதுத்துறை வங்கிகளின் மொத்த வருமானத்தில் வெறும் 0.23 சதவீதம் மட்டுமே என நிதியமைச்சர் விளக்கியுள்ளார். இது வங்கிகளுக்கு பெரும் லாபம் தரும் வழியல்ல; மாறாக, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்டும் நோக்கிலேயே வசூலிக்கப்படுவதாக அரசு வாதிடுகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் நலனை முன்னிட்டு பல பொதுத்துறை வங்கிகள் இந்த அபராதத்தை ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2020 மார்ச் மாதமே இந்த அபராதத்தை முழுமையாக நீக்கியது. அதைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டில் மேலும் 9 பொதுத்துறை வங்கிகள் இதை முழுமையாக ரத்து செய்துள்ளன. மீதமுள்ள 2 வங்கிகள் அபராதத் தொகையை கணிசமாகக் குறைத்து முறைப்படுத்தியுள்ளன. 2025-இல் அபராதத்தை முழுமையாக ரத்து செய்த முக்கிய வங்கிகள் மற்றும் அவை அமலுக்கு வந்த தேதிகள்:
- பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) - ஜூலை 1, 2025 முதல்
- கனரா வங்கி (Canara Bank) - ஜூன் 1, 2025 முதல் (அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும்)
- பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) - ஜூலை 1, 2025 முதல் (நிலையான சேமிப்புக் கணக்குகளுக்கு)
- இந்தியன் வங்கி (Indian Bank) - ஜூலை 7, 2025 முதல்
- பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) - 2025 ஜூலை முதல்
- மேலும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, மத்திய வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி போன்றவையும் இப்போது அபராதத்தை நீக்கியுள்ளன.
அபராதத்தை குறைத்த வங்கிகள்:
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா.இதனுடன், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி பல மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன: அபராதம் இனி நிலையான தொகையாக (எ.கா. ₹200 அல்லது ₹500) இருக்கக்கூடாது; குறைபாட்டுக்கு ஏற்ப விகிதாசாரமாக மிகக் குறைவாகவே விதிக்கப்பட வேண்டும்.
- கணக்கில் இருப்பு குறைந்தால் உடனடி அபராதம் இல்லை; SMS மூலம் எச்சரித்து 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
- அபராதத்தால் கணக்கு நெகட்டிவ் பேலன்ஸ் ஆகக்கூடாது.
டிஜிட்டல் இந்தியா நோக்கத்தில் சாமானியர்களின் சேமிப்புக்கு சுமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் இம்மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும், தனியார் வங்கிகளில் இன்னும் அதிக அபராதங்கள் வசூலிப்பது தொடர்வதால், அவற்றையும் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உங்கள் வங்கிக் கணக்கு ஜீரோ பேலன்ஸ் வகையா அல்லது மினிமம் பேலன்ஸ் தேவைப்படும் வகையா என்பதை உடனே சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம்!
இதையும் படிங்க: +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!