×
 

பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

பெங்களூருவில் பெய்த கனமழையால் போரிங் மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இன்று மாலை பெய்த அதிரடிப் பேய் மழையும், ஆலங்கட்டி மழையும் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்களுக்குத் தற்காலிகக் குளிர்ச்சியைத் தந்த இந்த மழை, சிவாஜிநகரில் நிகழ்ந்த கோர விபத்தால் ஒட்டுமொத்த நகரத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவில் மே 4-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. எனினும், இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 4 மணி அளவில் திடீரெனக் கார்மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சாந்திநகர், எம்.ஜி. ரோடு, விதான் சவுதா, ஹெப்பால் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் எங்கும் ஐஸ் கட்டிகள் பனிக்கட்டி அருவி போல நிரம்பிக் கிடந்தன. பலத்த காற்றினால் நகரின் முக்கியச் சாலைகளில் இருந்த ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன; இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மழையின் கோரமுகம் சிவாஜிநகரில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயம் எதிரே அமைந்துள்ள பவுரிங் (Bowring) அரசு மருத்துவமனையில் எதிரொலித்தது. மழையின் தாக்கத்தால் மருத்துவமனையின் பழைய காம்பவுண்ட் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சுவரை ஒட்டிய நடைபாதையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்கள் மற்றும் மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள் என மொத்தம் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் 4 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் பெங்களூரு மக்களை உறைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: பெங்களூரு ட்ராஃபிக் ஜாம்-க்கு வருகிறதா தீர்வு..?? 11 புதிய மேம்பாலங்கள் அமைக்க கர்நாடக அமைச்சரவை கிரீன் சிக்னல்..!!

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இவ்வளவு பழைய சுவர் பலவீனமாக இருந்ததை ஏன் கவனிக்கவில்லை என்று அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்த அவர், "நகரில் இது போன்ற நிலையில் இருக்கும் பழைய சுவர்களை உடனடியாகக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார். இயற்கைச் சீற்றத்துடன் அதிகாரிகளின் அலட்சியமும் சேர்ந்தே இந்த உயிர்களைப் பறித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share