மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! 12 பேரை தூக்கியடிக்க பிரதமர் மோடி திட்டம்! புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
ஏற்கனவே நடந்த பேச்சுகளின் அடிப்படையில் ஜூன் மாத மத்தியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன.
புது டெல்லி: பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அடுத்த மாதம் 9-ம் தேதியுடன் இரண்டாம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இதை முன்னிட்டு அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்ய பா.ஜ.க. தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய உடனேயே அனைத்து அமைச்சர்களுடனும் முக்கிய அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், கடந்த 12 ஆண்டு ஆட்சியின் சாதனைகள், குறைகள், மக்கள் மத்தியில் ஆட்சியின் பிம்பம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் செயல்பாடு ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. மேற்கு ஆசியப் போருக்குப் பிறகான நிலைமை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முக்கியமாக அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பேசப்பட்டு வந்த இந்த மாற்றம் ஜூன் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சில அமைச்சர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள். அதேசமயம், கட்சியில் செயல்படும் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
இதையும் படிங்க: மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!
இதற்கான முன்னோட்டமாக, மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி உத்தரப் பிரதேச பா.ஜ.க. தலைவராகவும், இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பா.ஜ.க. தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஆம் ஆத்மியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, மொத்தம் 12 அமைச்சர்கள் வரை மாற்றப்படலாம். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த அமைச்சர்கள், மாநிலங்களவை பதவிக்காலம் முடியும் சிலர் மற்றும் செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம்.
கர்நாடகா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மூன்று இணை அமைச்சர்கள் (தென் மாநிலம், உத்தரப் பிரதேசம், வடகிழக்கு மாநிலம்) பதவி நீக்கம் செய்யப்படலாம். கூட்டணிக் கட்சிகளுக்கும் கூடுதல் இடங்கள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த அமைச்சரவை மாற்றம் பா.ஜ.க.வின் மூன்றாவது ஆட்சியை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 5 நாட்டு தலைவர்களுக்கும் பரிசை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ஸ்பெஷல் கிப்ட்!