×
 

பீகார் முதலமைச்சர் யார்? பாஜக புது பார்முலா! அமித் ஷா முன் முடிந்த பரபரப்பு டீல்!!

முதல்வர் பதவி மீண்டும் நிதிஷ் குமாருக்கும், பா.ஜ., லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.) 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தே.ஜ., புதிய அரசு அமைக்க ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க உள்ளதாகவும், அமைச்சர் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பதவி என்ற விகிதத்தில் பிரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல் முறையாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) 85 இடங்களைப் பெற்றுள்ளது. 

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சி (ஆர்.வி.) 19 இடங்களையும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்.) 5 இடங்களையும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்.) 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதையும் படிங்க: மூச்ச்ச்!!! வாயை திறக்கவே கூடாது!! கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் மறைமுக வார்னிங்!

அதேநேரம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் அடங்கிய மஹாகட்பந்தன் (இண்டி) கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணி மொத்தம் 34 இடங்களில் மட்டுமே வென்றது. ஆர்.ஜே.டி. 25 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடமும் பெறவில்லை.

பாஜக அதிக இடங்களைப் பெற்றதால், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுமா அல்லது பாஜகவிலிருந்து முதல்வர் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், டில்லியில் தே.ஜ. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர்.

அப்போது, ஆட்சி அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சுகள் நடைபெற்றன. ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற விகிதத்தில் புதிய பார்முலா முன்வைக்கப்பட்டது. இதற்கு கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் நிதிஷ் குமாரையே முதல்வராக்க விரும்புவதாகவும், அவர் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா நேற்று பாட்னாவில் நிதிஷ் குமாரைச் சந்தித்து, தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனால், முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டு, பாஜக மற்றும் லோக் ஜன் சக்திக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை மற்றும் பாராளுமன்ற விதிகளின்படி, மொத்த உறுப்பினர்களின் 15 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் பீகாரில் 36 பேர் வரை அமைச்சர்களாக்க முடியும். இந்த விதிகளுக்கு ஏற்பவும், தே.ஜ. பார்முலாவின்படியும், 89 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜகவுக்கு 15 அல்லது 16 அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம். 85 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜே.டி.யூ.வுக்கு 14 பதவிகள், சிராக் பஸ்வானின் கட்சிக்கு 3 பதவிகள், ஜிதன் ராம் மஞ்சியின் கட்சிக்கும் உபேந்திர குஷ்வாஹாவின் கட்சிக்கும் தலா ஒரு பதவி வழங்கப்படலாம்.

புதிய அரசின் பதவியேற்பு விழா நவம்பர் 17 முதல் 20 வரை நடைபெறலாம். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த வெற்றி, பீகார் மக்களின் நல்லாட்சி, வளர்ச்சி, சமூகநீதி கொள்கைகளுக்கு ஆதரவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பீகார் தோல்விக்கு SIR–ஐ குறை சொல்லக்கூடாது! அகிலேஷ் சொல்லுறது தப்பு! அசாதுதீன் ஓவைசி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share