TVK to BJP? பாஜகவுக்கு வாங்க வைஷ்ணவி.. ஓபனாக அழைப்பு விடுத்த வானதி!
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகியுள்ள வைஷ்ணவிக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பாஜகவில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். மாவட்டச் செயலாளர் நியமனம், மாநாடு, பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்த நகர்வுகளை தவெக நடத்திவருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. அப்போது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி எனும் தவெக தொண்டருக்கு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் மன வருத்தத்தில் இருந்த கோவை, கவுண்டம்பாளையம் 16வது வார்டை சேர்ந்த வைஷ்ணவி தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். கடந்த 3 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.என் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்க சிலர் செயல்படுகிறார்கள். பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, பொதுசெயலாளரை சந்திக்க மேடை ஏறினால் மனித சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளவிட்டது என தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன்.
இதையும் படிங்க: தமிழகத்தை வட மாநிலங்களோட கம்பேர் பண்ணாதீங்க - வானதி ஸ்ரீனிவாசன் வேதனை...!
நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ. நீயெல்லாம் ஒரு பெண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.
இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும் வைஷ்ணவி தெரிவித்தார். இளம் பெண்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் தான் வருகிறோம். ஆனால் தற்பொழுது அவர்களை இழக்கின்ற ஒரு சூழலை மாவட்ட நிர்வாகிகள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், வைஷ்ணவி உண்மையாக மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம் என்றும் கூறினார். பெண்கள் தங்கள் வாழ்க்கையை அரசியலுக்கு அர்ப்பணிக்க நினைக்கும்போது, தங்கள் குடும்பத்தில் இருந்தோம், சமூதாயத்தில் இருந்தோ அவர்களுக்கு சுலபமாக ஆதரவு வராது.
ஆனால் இதனை எல்லாம் தாண்டி அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடியது எனும் உறுதி இருந்தால், எத்தகைய தடையையும் நம்மால் தாண்ட முடியும். எனவே சகோதரி உண்மையாக மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம் என்று பாஜக கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
இதையும் படிங்க: திமுக வீழ்வது உறுதி.. ஸ்டாலின் இனி தப்ப முடியாது.. லெஃப்ட் & ரைட் வாங்கிய வானதி..!