மீண்டும் மீண்டுமா..!! பள்ளிகளில் இருந்து பதறியடித்து ஓடிய மாணவர்கள்.. பரபரப்பான தலைநகரம்..!
டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஜூலை 16ம் தேதியான இன்று, ஐந்து தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளி, வசந்த் குஞ்சில் உள்ள வசந்த் வேலி பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பச்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா ஆகிய 5 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் சுமார் 10 பள்ளிகளும் ஒரு கல்லூரியும் இதேபோன்ற மிரட்டல்களைப் பெற்றுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மிரட்டல் மின்னஞ்சல்கள் காலை நேரத்தில் பெறப்பட்டதையடுத்து, பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றின. பின்னர் இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த டெல்லி காவல்துறை, வெடிகுண்டு மீட்பு படை, நாய்ப் பிரிவு மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பள்ளிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..
மேலும் இந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரிவித்த போலீசார், மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 2024 முதல் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன, ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மிரட்டல்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. காவல்துறை மற்றும் மத்திய அரசு இதற்கு பின்னால் உள்ளவர்களை கண்டறிய தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!