டெலிகாம் துறையில் மெகா கூட்டணி! கைகோர்க்கும் பிஎஸ்என்எல் - விஐ நிறுவனங்கள்!
BSNL மற்றும் VI நிறுவனங்களும் தங்களின் Towers, Fibre, Spectrum உள்ளிட்ட கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றமாக, அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் தனியார் நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) ஆகிய இரண்டும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக இரு நிறுவனங்களும் தங்களின் உள்கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின்படி, இரு நிறுவனங்களும் கீழ்க்கண்ட முக்கிய வளங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளன. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் மற்றும் விஐ நிறுவனங்களின் டவர்களை இரு நிறுவன வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சிக்னல் கிடைக்காத இடங்களிலும் தடையற்ற சேவை கிடைக்கும். அதிவேக இணையச் சேவைக்காக (Broadband) இரு நிறுவனங்களும் தங்களின் ஃபைபர் நெட்வொர்க்கைப் பகிர்ந்து கொள்ளும். 4G மற்றும் 5G சேவைகளை வலுப்படுத்தத் தங்களின் அலைக்கற்றைத் திறனை (Spectrum Capacity) இணைந்து பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.
இதையும் படிங்க: பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!
குறிப்பாக ஊரகப் பகுதிகளில் பிஎஸ்என்எல் டவர்களும், நகர்ப்புறங்களில் விஐ டவர்களும் பலமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்குச் சிக்னல் பிரச்னை இருக்காது. உள்கட்டமைப்பை இணைப்பதன் மூலம் அலைக்கற்றை நெரிசல் (Congestion) குறைக்கப்பட்டு, டேட்டா வேகம் கணிசமாக உயரும். புதிய டவர்களை அமைப்பதற்கான செலவு (Capital Expenditure) குறைவதால், வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் பிளான்களை வழங்க முடியும்.
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்திற்குப் பிஎஸ்என்எல்-ன் பரந்த நெட்வொர்க் பெரும் உதவியாக இருக்கும். அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4G/5G சேவையைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகத் தரம் உயர்த்த விஐ-ன் தொழில்நுட்பம் உதவும்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!