“வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்!” வல்லுநர்களுடன் பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!
2026-27 மத்திய பட்ஜெட் தொடர்பாகப் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் பொருளாதார வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 30) டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார்.
நிதி ஆயோக் (NITI Aayog) அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி ஆயோக் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சர்வதேசப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கான ஆலோசனைகளை பிரதமர் கேட்டறிய உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான முன்னோட்டமாக, நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்யவும், முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து விவாதிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார். இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: "ஆப்ரேஷன் சிந்தூர் டூ அயோத்தி!" - இந்தியர்களின் சாதனைப் பயணத்தை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!
குறிப்பாக, இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு போன்ற சர்வதேச வர்த்தகச் சவால்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், ‘விக்சித் பாரத் 2047’ (Viksit Bharat 2047) இலக்கை அடையத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, திறன் மேம்பாடு மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவது போன்ற அம்சங்களில் நிபுணர்களின் கருத்துகளைப் பிரதமர் கேட்டறிய உள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) கூடுதல் சலுகைகள், வருமான வரி மாற்றங்கள் மற்றும் பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிதியமைச்சர் பல்வேறு துறை சார்ந்த அமைப்புகளுடன் முதற்கட்ட ஆலோசனைகளை முடித்துள்ள நிலையில், பிரதமருடனான இன்றைய சந்திப்பு பட்ஜெட்டின் இறுதி வடிவத்தைத் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘மக்கள் பங்கேற்பு’ அடிப்படையிலான பட்ஜெட்டை உருவாக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!