தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல் சுற்றிலேயே மாஸ் காட்டும் என்ஆர் காங்கிரஸ்..!! வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!!
சுமார் 21,000 வாக்குகள் மட்டுமே இருப்பதால் காலை 10 மணியளவில் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன் பின் தட்டாஞ்சாவடி தொகுதியிலிருந்து ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.
அக்டோபர் 6ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 31 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 26,921 வாக்காளர்கள் (ஆண் 12,575, பெண் 14,341, மூன்றாம் பாலினத்தவர் 5) தகுதி பெற்றிருந்த நிலையில், 21,756 பேர் (ஆண் 10,056, பெண் 11,695, மூன்றாம் பாலினத்தவர் 5) வாக்களித்தனர். இது 80.81 சதவீத வாக்குப்பதிவாகும். கடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான 87.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 6.29 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் அனைத்துக் கட்சிகளிலும் பதற்றம் நிலவுகிறது. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ்-தவெக கூட்டணியாக புதுச்சேரியில் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் கவனம் அதிகம்.
இதையும் படிங்க: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: EVM, VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு! 2 பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிப்பு! பாதுகாப்பு தீவிரம்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் 21,000 வாக்குகள் மட்டுமே இருப்பதால் காலை 10 மணியளவில் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தபால் வாக்குகளின் அடிப்படையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 3,200 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 1,980 வாக்குகளும், திமுக வேட்பாளர் சேது செல்வம் 1,600 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும். தொகுதியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!