×
 

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2027 மார்ச் 1 முதல் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவின்10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மற்றும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் டிஜிட்டல் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். இதனால் முன்பு இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகளை வெளியிடுவதற்கான காலமும் குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை "இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பயிற்சி" என்றும், இது உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சாதிவாரி கணக்கு!

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகளின் வரைபடம் எடுக்கும் பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் சாதிவாரியான தரவுகள் மிகவும் முக்கியமானவை என்பதால், எதிர்க்கட்சிகள் கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் 2027 இல் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்று சாதனை! - 2027ல் இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share