200 தொகுதிகளில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா.? பழைய ரெக்கார்டுகள் என்ன சொல்கின்றன.?
கடந்த ஓராண்டாகவே முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணியினர் தொடர்ந்து 400 தொகுதிகளில் வெற்றி கூறி வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வெற்றி இலக்காக பாஜக நிர்ணயித்தது போல தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் கூறவில்லை. கடந்த ஓராண்டாகவே முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும் இதே போன்ற இலக்கை நிர்ணயித்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது பிரதமர் மோடி 'அப் கி பார் 400 பார்' என்று முழங்கினர். பாஜகவினரும் 400 தொகுதிகளில் வெற்றி என்று முழங்கி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒட்டுமொத்தமாக 293 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014, 2019இல் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜகவால் 232 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. 400 தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை பாஜகவில் எட்ட முடியவில்லை.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 200 தொகுதியில் வெற்றி என்கிற இலக்கை திமுகவும் நிர்ணயத்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 200 தொகுதியில் வெல்ல வேண்டும் என்பது திமுகவின் எண்ணமாக உள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் பயனாளிகள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறது. இவர்களுடைய வாக்கு திமுகவிற்கு அப்படியே கிடைத்தால் 200 தொகுதிகளில் வெற்றி என்பது சாத்தியமாகும் என்று திமுக கருதுகிறது.
இதையும் படிங்க: திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.!
ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே 200 தொகுதிகளில் கூட்டணிகள் வென்று சாதனை படைத்துள்ளன. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தமாக கூட்டணி 221 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இது தவிர 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் கூட்டணிகள் பெற்ற அதிகபட்ச வெற்றி இதுதான். குறிப்பாக 2011க்கு பிறகு 200 தொகுதிகளை எந்தக் கூட்டணியும் தொடவில்லை.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தி தேர்தலை எதிர்கொண்ட அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வென்று ஆச்சரியமூட்டியது.
மேலும் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் புதிய வரவாக வந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்தி வருகிறது. இது போன்ற வாக்கு பிரிப்புகள் அதிகம் இருக்கும் சூழலில் அதிகபட்ச வெற்றி என்பது குறைய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் வாக்குப் பிரிப்புகள் அதிகம் இருந்தால், பிரதான போட்டி உள்ள கட்சிகளின் வாக்கு வித்தியாசம் மிக நெருக்கமாக வரும். அப்போது வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். என்றாலும் தேர்தல் களத்தில் மக்களை சந்திப்பது மக்களிடம் தங்கள் சாதனைகளை எடுத்துரைப்பது போன்ற திண்ணை பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் அரசியல் கட்சிகள் இலக்கை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இது போன்ற இலக்குகள் எப்படி செல்கின்றன என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் அதிமுக - பாஜக ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் தாறுமாறு கணிப்பு.!!