என் தெய்வமே! கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்து கதறி அழுத பிரேமலதா..!
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை பார்த்து பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கண் கலங்கினர்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 100-வது திரைப்படமாக 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு அன்று வெளியான இந்தப் படம், தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், வெளியான காலத்தில் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மறுவெளியீடு, விஜயகாந்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஒரு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது. கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் விஜயகாந்தின் தீரமிக்க நடிப்பும், மன்சூர் அலி கானின் வில்லத்தனமான கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தப் படம் வெளியானபோது 275 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, வசூல் சாதனை படைத்தது.
நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்டுள்ளது. இந்த மறுவெளியீட்டிற்காக, படம் நவீன 4K தொழில்நுட்பத்தில் முழுமையாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு புதிய காணொளி மற்றும் ஒலி அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க: தனி ஆள் இல்ல கடல் நான்! மதுரை மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த விஜய்
இந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மறு வெளியீட்டை விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், பிரேமலதாவின் தம்பியும் தேமுதிக பொருளாளருமான L.K. சுதீஷ் உள்ளிட்டோரம் கண்டு ரசித்தனர். அப்போது திரையில் தோன்றிய விஜயகாந்தை கண்டதும் பிரேமலதா கதறி அழுதார். மேலும் விஜய பிரபாகரனும் தனது தந்தையை நினைத்து கண் கலங்கினார்.
இதையும் படிங்க: அரசு நிதியில் பயணம்.. எழுந்த பரபரப்பு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது..!!