வந்தது புதிய மாற்றம்.. 2026-2027முதல் 3-வது மொழி கட்டாயம்..!! CBSE அதிரடி அறிவிப்பு..!!
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ கல்வி முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
சென்ட்ரல் போர்டு ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (சிபிஎஸ்இ) புதிய தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-ஐ அடிப்படையாகக் கொண்டு 2026-27 கல்வியாண்டு முதல் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் பல்மொழித் திறன் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்மையான மாற்றம், ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகும்.
இதில் மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாகக் கருதப்படும். இந்த மாற்றம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும். 2026-27ல் ஆறாம் வகுப்பில் தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை 2030-31ல் முழுமையாக அமலுக்கு வரும். இந்தக் கொள்கையின் கீழ் மொழிகள் R1, R2, R3 என்ற மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படும்.
R1 என்பது மாணவரின் முதன்மை மொழி (அதிக ஆழத்துடன் படிக்கப்படும்), R2 வேறொரு மொழி, R3 என்பது கூடுதல் மொழியாகும். இந்த மூன்றாவது மொழி (R3) ஆறாம் வகுப்பு முதல் கட்டாயமாக்கப்படும். இதன் நோக்கம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளையாவது தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதாகும். இது பல்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் என்பி-யின் இலக்குடன் ஒத்துப்போகிறது.
இதையும் படிங்க: மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!
வெளிநாட்டு பள்ளிகளில் படித்துவிட்டு இந்திய உள்நாட்டு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படலாம். எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை அவர்கள் படித்த மூன்றாவது மொழி உள்நாட்டு பாடத்திட்டத்தில் இல்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட விதிகளின்படி விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களின் மொத்த எண்ணிக்கையையும் முழுமையாகக் கற்க வேண்டும்.
மற்றொரு முக்கிய மாற்றம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இரு நிலைத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதாகும். அனைத்து மாணவர்களும் நிலையான (ஸ்டாண்டர்ட்) அளவிலான பாடத்திட்டத்தைப் படித்து, 80 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரப் பொதுத் தேர்வு எழுத வேண்டும். இதில் அடிப்படை அறிவு மற்றும் புரிதலைச் சோதிக்கும் வினாக்கள் இடம்பெறும்.உயர் திறன் கொண்ட மாணவர்கள், தாங்கள் விரும்பினால் மேம்பட்ட (அட்வான்ஸ்ட்) நிலையைத் தேர்வு செய்யலாம்.
இது தனியாக 25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரத் தேர்வாக இருக்கும். இந்த மேம்பட்டத் தேர்வு உயர் சிந்தனைத் திறன் மற்றும் ஆழமான கருத்துப் புரிதலை மதிப்பிடும். இதன் மதிப்பெண்கள் மொத்தத் தரவரிசையில் சேர்க்கப்படாது. 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மார்க்ஷீட்டில் தனியாக மேம்பட்ட நிலை தகுதி குறிப்பிடப்படும். இந்த வசதி மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வத்துக்கும் எதிர்கால உயர்கல்வித் தேவைக்கும் ஏற்ப தேர்வு செய்ய உதவும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் என்இபி 2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்-எஸ்இ) 2023-ஐ அடிப்படையாகக் கொண்டவை. சிபிஎஸ்இ அதிகாரிகள் இந்தப் புதிய அமைப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளனர். பல்மொழித் திறன் மூலம் கலாச்சாரப் பன்மைத்துவத்தைப் பேணவும், அறிவியல்-கணிதத் துறைகளில் ஆழமான புரிதலை வளர்க்கவும் இது உதவும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு தயாராக இருக்க வேண்டும். இந்தப் புதிய முறை இந்தியக் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: என்னது..!! QR Code-ஐ ஸ்கேன் செஞ்சா பாட்டு கேக்குதா..!! CBSE கணிதத் தேர்வில் ரிக்ரோல் சர்ச்சை..!!