உடல் எடையை குறைக்கணுமா..?? 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த CDSCO..!! மத்திய அமைச்சர் தகவல்..!!
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எடை குறைப்பு சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் எடை குறைப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல் விரிவான பதிலளித்துள்ளார். நாட்டின் உச்சபட்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) எடை குறைப்பு சிகிச்சைக்காக மூன்று மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவை: ஆர்லிஸ்டாட் (Orlistat), டிர்செபடைடு (Tirzepatide) மற்றும் செமாக்ளூடைடு (Semaglutide) ஆகியவை.
இந்த மருந்துகள் மருத்துவர்களின் முறையான பரிந்துரையுடன் மட்டுமே சில்லறை மருந்தகங்களில் கிடைக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவரின் ஆலோசனைப்படியும், தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். எடை குறைப்பு அல்லது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மாற்றுவதாக கூறி விற்கப்படும் எந்த மருந்துகளும் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள் 2019க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!
இதற்கான பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் மற்றும் மருத்துவ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு CDSCO அங்கீகாரம் வழங்குகிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகள் மீறப்பட்டால், மாநில அளவில் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டை தடுக்கவும், அவற்றை ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தவறான மருந்து பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கவும் அரசு உறுதியாக உள்ளது.
இந்த அறிவிப்பு, அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினைக்கு முறையான மருத்துவ தீர்வுகளை ஊக்குவிப்பதோடு, சந்தையில் உள்ள போலி மற்றும் தரமற்ற எடை குறைப்பு தயாரிப்புகளுக்கு எதிரான கடும் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!