×
 

நீடிக்கும் போர் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்கள்..!! மத்திய அரசு அதிரடி..!!

போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் காரணமாக பெரும் அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீரென பெருமளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் மூலம் ஈரானின் ராணுவ இலக்குகளை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் என ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவேசமான பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து தீவிரமான பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் மீதும், அமெரிக்க ஆதரவு கொண்ட வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் முழு பிராந்தியமும் போர் நெருப்பில் சிக்கியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!

பதற்றம் உச்சத்தை எட்டியதால், ஈரான் அண்டை நாடுகள் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை முழுமையாக மூடியுள்ளன. இதனால் விமான சேவைகள் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், சுற்றுலா, கல்வி, வேலைக்காகச் சென்றவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர். 

விமானங்கள் இயங்காததால் அவர்கள் விமான நிலையங்களிலும், தங்கும் இடங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் பெரும் மன உளைச்சலும், பாதுகாப்பு அச்சமும் நிலவுகிறது. இருப்பினும், நேற்று முதல் சில வளைகுடா நாடுகளிலிருந்து குறைந்த அளவு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் மூலம் சிறப்பு மீட்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற பிற விமான நிறுவனங்களும் சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளன. இதனால், அடுத்த சில நாட்களில் பெருமளவு இந்தியர்கள் சொந்த நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, வளைகுடா பிராந்தியத்தில் தங்கியுள்ள இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளியுறவு அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பகுதியின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தேவையான உதவிகளைப் பெற இந்தியர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இந்திய அரசு தனது குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் போர் நிலைமை விரைவில் தணிந்து அமைதி திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: லெபனான் மீது மீண்டும் தாக்குதல்! கொன்று குவிக்கும் இஸ்ரேல்!! வான்வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share