திருமலைக்கு புதிய வரப்பிரசாதம்.. ரூ.900 கோடி திட்டங்களை திறந்து வைக்கிறார் சந்திரபாபு நாயுடு..!!
இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வரும் அறைப் பற்றாக்குறை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விழாவின் முதல் நாளன்று சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து விழாவை கொண்டாட்டமாக தொடங்கி வைக்க உள்ளார். இந்த வருகையின் போது, திருமலையில் சுமார் ரூ.900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகளை அவர் திறந்து வைக்கவுள்ளார். இது பக்தர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட திருப்பதி வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம், உலகளாவிய பக்தர்களை ஈர்க்கும் வகையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது விழாவோடு இணைந்து திறக்கப்பட உள்ளது. அதேநேரம், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிப்பு 310 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிறப்பு நிகழ்வாக லட்டு திருவிழா நடைபெறும். இதில் முதல்வர் நாயுடு சிறப்பு தங்க நாணயத்தை வெளியிடுவார்.
சாதாரண பக்தர்களின் தங்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.600 கோடி செலவில் ஒரே நேரத்தில் 10,000 பேர் தங்கக்கூடிய பிரம்மாண்ட விடுதி வளாகம் திருமலையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வரும் அறைப் பற்றாக்குறை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிற மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி உதவியுடன் ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் நவீன மின்சார பஸ்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். 50 புதிய பஸ் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
நேற்று மட்டும் 81,064 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். 33,136 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் வருவாய் ரூ.5.36 கோடியாக இருந்ததுடன், சாதனையாக 4.09 லட்சம் லட்டுகள் விற்பனையானது. இந்த வளர்ச்சிப் பணிகள் திருப்பதியை மேலும் பக்தர் நட்புடன் மாற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சிக்கு தனி மாவட்டம்..! சட்டப்பேரவையில் MLA நித்தியானந்தன் அதிரடி கோரிக்கை..!