×
 

நம்ம ஊரு காத்து எப்படி இருக்கு? இனி டிஜிட்டல் போர்டுல லைவ் அப்டேட்.. சென்னை மாநகராட்சியின் சூப்பர் பிளான்!

சென்னை காற்றின் தரத்தை 19 விதமான தரவுகளுடன் துல்லியமாக அறிய 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னையில் காற்றின் தரம் எப்படியிருக்கிறது என்பதை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் இந்த சென்சார் போர்டு பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

பெருகிவரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் புகையால் சென்னையின் காற்று மாசு அளவு குறித்துப் பல்வேறு கவலைகள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்றின் தரத்தை (Air Quality) நொடிக்கு நொடி தெரிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதியத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. சுமார் ₹6.36 கோடி மதிப்பீட்டில், சென்னையின் 15 மண்டலங்களிலும் மொத்தம் 100 இடங்களில் ‘சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார்’ பலகைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் முன்னோட்டமாக, சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயில் அருகே முதலாவது டிஜிட்டல் பலகை தற்போது சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் காற்றில் கலந்துள்ள நுண் துகள்களின் (PM 2.5 & PM 10) அளவு மட்டுமன்றி, நாசகார வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், ஈரப்பதம், மழை அளவு, காற்றழுத்தம் மற்றும் வெப்பநிலை என மொத்தம் 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தற்போதையச் சூழலை மக்கள் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

இதையும் படிங்க: திடீர் மழையைத் துல்லியமா சொல்லும் புது டெக்னாலஜி! தானியங்கி நிலையங்களால் இனி சென்னைக்கு ஆபத்தில்லை!

போக்குவரத்து சிக்னல்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, தி.நகர் போன்ற பகுதிகளில் இந்தப் பலகைகள் முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படவுள்ளன. வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களிலும் இந்தப் பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகமாக இருந்தால், அதற்கேற்ப மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தத் தரவுகள் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "சென்னையை ஒரு பசுமை மற்றும் சுத்தமான நகரமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பில் இது ஒரு மைல்கல்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

இதையும் படிங்க: காய்ச்சல் போயும் இருமல் போகலையே! சென்னையில் பரவும் மர்ம வைரஸ்; சுகாதாரத்துறை அதிரடி ஆய்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share