×
 

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய உயர்நிலை சாலை திட்டம் ரத்து? அமைச்சரவையில் முக்கிய முடிவு!

சென்னை திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட திருவான்மியூர்–உத்தண்டி நான்கு வழித்தட உயர்நிலை சாலைத் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை சுமார் 14.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழித்தட உயர்நிலை சாலை அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

சுமார் ரூ.2,100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருந்த இந்தத் திட்டத்திற்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மண் ஆய்வு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி... முதல்வர் விஜய்க்கும் பாராட்டு!

இந்தத் திட்டம் தொடர்பாக ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திட்ட மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாகவும், குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரிய நிறுவனத்தை புறக்கணித்து, அதிக தொகை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அப்போது அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், சென்னை உயர்நிலை சாலைத் திட்டத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த முடிவு குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

முன்னதாக, சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறையின் சில ஒப்பந்தங்களையும் புதிய அரசு ரத்து செய்திருந்தது. அந்த வரிசையில், திருவான்மியூர்–உத்தண்டி உயர்நிலை சாலைத் திட்டமும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையனை திடீரென சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share