இந்தியாவுக்கு வர வேண்டிய திட்டத்தை தட்டிப்பறித்தது சீனா!! பாதுகாப்பு அச்சுறுத்தலால் கவலை!
வங்கதேசத்தில் இந்தியா மேற்கொள்ளவிருந்த முக்கிய துறைமுக திட்டத்தை, சீனா தட்டிப் பறித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த முக்கிய பொருளாதார மண்டல திட்டம் தற்போது சீனாவுக்கு சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தெற்காசிய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு நலன்கள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு, இந்தியாவின் நிதியுதவியுடன் மோங்லா மற்றும் சிட்டகாங் பகுதிகளில் பொருளாதார மண்டலங்களை உருவாக்க ஒப்பந்தம் செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் நில மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் ஹிராநந்தானி குழுமம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பிறகு, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திட்டப் பணிகள் முன்னேறாததை காரணம் காட்டி, வங்கதேச அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதையும் படிங்க: இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!
இந்த சூழலை பயன்படுத்திய சீனா, மாற்று முதலீட்டு திட்டத்தை வங்கதேச அரசிடம் முன்வைத்தது. பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் தாரிக் ரஹ்மான், தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்று, மோங்லா துறைமுகம் அருகே 110 ஏக்கர் பரப்பளவில் பொருளாதார மையம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் டீஸ்டா நதி மேலாண்மை திட்டத்திற்கும் சீனா தொழில்நுட்ப உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
மோங்லா துறைமுகம், இந்தியாவின் கொல்கத்தாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள முக்கிய கடல்சார் பகுதி என்பதால், அங்கு சீன நிறுவனங்களின் பங்கு அதிகரிப்பது பாதுகாப்பு ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இந்தியா கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கலாம் என்ற மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங், வங்கதேசத்தின் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றங்கள் தெற்காசியாவின் புவிசார் அரசியல் சமநிலையை எதிர்காலத்தில் பாதிக்கக்கூடும் என்ற கருத்துகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவர்..!! வங்கதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு..!!