டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூர தடியடியைக் கண்டித்து, சென்னையில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பினர் இன்று திரண்டு பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கான CJP இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாகப் போராடி வரும் தங்களது இயக்கத் தோழர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் குதித்த CJP பிரதிநிதிகள் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர். லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவோடு விளையாடி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குக் காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்திய மாணவர்களின் உயிரைப் பறிக்கும், சமத்துவமற்ற நீட் தேர்வை இந்திய மண்ணில் இருந்து முற்றிலுமாக அறவே ரத்து செய்ய வேண்டும்.
தலைநகர் டெல்லியில் நீட் முறைகேட்டைத் தட்டிக்கேட்ட இளைஞர்களைக் கண்ணீர்ப் புகை வீசியும், இணையத்தை முடக்கியும், மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியும் ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாணவர்களின் நியாயமான கவலைகளுக்குப் பதிலளிக்கத் துப்பில்லாத இந்த அரசு, காவல்துறையின் தடியடி மூலம் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது. டெல்லியில் விழுந்த ஒவ்வொரு தடியடி அடிக்கும் எதிரொலியாகத் தமிழ்நாட்டின் இளைஞர்கள் தங்களின் குரலைத் தொடர்ந்து எழுப்புவார்கள் என ஆவேசமாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டெல்லி காட்சிகள் அதிர்ச்சியளிக்குது! நீட் போராட்ட தடியடிக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
பனகல் மாளிகை அருகே CJP இயக்கத்தினர் நடத்திய இந்த அதிரடி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். டெல்லியில் தொடங்கிய மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தற்போது சென்னையிலும் தீவிரமடைந்துள்ளது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!