“எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் மனுதாரர் ஏற்ற வேண்டும் இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவிட்டதோடு, 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் குவிய ஆரம்பித்தனர். அங்கு கூடி பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 144 தடை உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், அனைவரும் கலைந்து செல்லும் படி அறிவுறுத்தினர்.
ஆனால், கலைந்து போக மறுத்த நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. தமிழ்நாடு முழுவதுமே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று இரவு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு தீங்கிழைக்கும் வகையிலும், மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றது. இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.மெட்ரோ இரயில், #AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீள முடியாத வேதனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... முதல் ஆளாக ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி...!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 5, 2025
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
அதாவது மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்கப்படவில்லை. சமீபத்தில் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதேபோல் வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகளை அமைப்பது என மதுரைக்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு முடக்கி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டி வருகின்றது.
இப்படிப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மதுரையில் செயல்படுத்தாத மத்திய அரசு, மதுரையில் மக்களுக்கு தேவை இல்லாத, எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாத மதவாத சர்ச்சைகளை கிளப்பி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். மத்திய அரசு மதுரையில் என்ன மாதிரியான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என நினைக்கிறது என்பதை மாமதுரை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் மத்திய அரசுக்கு சவால் விட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!