எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!
பிரதமர் நரேந்திர மோடி எங்களை சுட்டுத் தள்ளினாலும் கேரளாவில் வந்தே மாதரம் முழுமையாக பாடப்படாது என காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் பேசியுள்ளார்.
கேரள மாநிலத்தில் வந்தே மாதரம் தேசியப் பாடலின் முழுப் பதிப்பும் இந்த ஜென்மத்தில் பாடப்படாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியே சுட்டுத் தள்ளுவதாக மிரட்டினாலும் கூட அது முழுமையாகப் பாடப்படாது என்றும் காசர்கோடு தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உன்னிதன் மிகவும் அதிரடியாகப் பேசியுள்ளார்.
ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், கேரள அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இத்தகைய கருத்துகளை முன்வைத்துள்ளார்.
கேரளாவில் வந்தே மாதரம் பாடல் இதுவரை எந்த முறையில் பாடப்பட்டு வந்ததோ, அதே முறையில்தான் தொடர்ந்து பாடப்படும். அதைத் தாண்டி எந்தக் கூடுதல் வரிகளும் பாடப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!
பிரதமர் நரேந்திர மோடி எங்களைச் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டினாலும் கூட, வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்த ஜென்மத்தில் அது சாத்தியமில்லை என்று ஆவேசமாகக்கூறினார்.
மத்திய அரசையும் ஆளுநர்களையும் கடுமையாகச் சாடிய அவர், ஆளுநர் மாளிகைகள் தரம் தாழ்ந்த அரசியலின் மையப் புள்ளிகளாக மாறிவிட்டதாகவும், பண பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைச் சீர்குலைக்க ஆளுநர்கள் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கேரளாவில் வழக்கமாக அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் நடைமுறை உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த இந்தச் சர்ச்சையில், பாரம்பரிய நடைமுறையே தொடரும் எனக் காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் அளித்துள்ள பேட்டி தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?