சீனா போரில் இந்தியா தோல்விக்கு காரணம் நேரு! சர்ச்சை தீயை பற்ற வைக்கும் சசிதரூர்! பாஜக -காங்., மோதல்!
முன்னாள் பிரதமர் நேருவின் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நேரு குறித்து பாஜகவும் காங்கிரஸும் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், சசி தரூரின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசுப் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு திட்டமிட்டதாகவும், அதை சர்தார் வல்லபாய் படேல் கடுமையாக எதிர்த்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதனால் நேரு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், கேரளாவில் நடைபெற்ற 4வது சர்வதேச புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற சசி தரூர், நேரு குறித்து பேசினார். அவர் கூறியதாவது: "நான் நேருவின் ரசிகன் தான். ஆனால், விமர்சனம் செய்யாத ரசிகன் என்று சொல்ல முடியாது. அவரது எண்ணங்களையும், பார்வையையும் போற்றுகிறேன். அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இருப்பினும், அவரது அனைத்து நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்க மாட்டேன்.
இதையும் படிங்க: துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!
நேரு செய்த பல விஷயங்கள் உயர்ந்த பாராட்டுக்கு உரியவை. குறிப்பாக, இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் அவர் தான். அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் நேருவுக்கு எதிரானவர்கள் என்பது உறுதி. நேருவின் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவரை மட்டுமே குற்றம் சாட்டுவது நியாயமற்றது.
சில சமயங்களில் பாஜகவின் விமர்சனங்களுக்கு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, 1962 சீனப் போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவின் சில முடிவுகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போது எந்த பிரச்சினைக்கும் நேருவை குறை சொல்வதையே பாஜகவினர் தங்கள் வேலையாக வைத்துள்ளனர்."
சசி தரூரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரு போன்ற மூத்த தலைவர்களை விமர்சிப்பது கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது காங்கிரஸ் உட்கட்சி அரசியலில் புதிய பிரச்சினையை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!