×
 

8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

ராணுவ சட்டங்களை மீறி தண்டனை பெற்ற வீரர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்தியாவின் முக்கிய ராணுவ தகவல்களை கசியவிட்டதாக கூறப்படும் இளம் தம்பதியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 8 சிம் கார்டுகளை வாங்கி, துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சராய் காலே கான் பகுதியை சேர்ந்த சாஹில், 25, மற்றும் அவரது மனைவி சமீரா, 21, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்காக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லி போலீசாரின் சிறப்பு படை விசாரணையை தொடங்கியது.

இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சாஹிலை போலீசார் கைது செய்து அவரது செல்போனை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததற்கான தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கால் சென்டரில் பணியாற்றி வந்த அவரது மனைவி சமீராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையின்படி, சமூக வலைதளம் மூலம் சாஹிலுக்கும் சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமீரா மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சாஹிலுக்கு அறிமுகமானதாகவும், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் இருவரும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தபடியே ராணுவம் தொடர்பான தகவல்களை சேகரித்து அனுப்பும் பணியை சாஹில் மேற்கொண்டதாகவும், ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளை கண்காணித்து புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், ராணுவ சட்டங்களை மீறி தண்டனை பெற்ற வீரர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 இந்திய சிம் கார்டுகளை வாங்கி துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சிம் கார்டுகளை பாகிஸ்தானில் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும், இந்திய எண்கள் மூலம் முக்கிய குழுக்களில் நுழைந்து தகவல்களை சேகரிக்க முயற்சி நடந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பாகிஸ்தானை சேர்ந்த உளவு ஏஜென்டுகளிடமிருந்து தம்பதி ரூ.30 ஆயிரம் பெற்றதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கசியவிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களின் தன்மை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share