×
 

டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா வரும் 15 அன்று தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

நாட்டின் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் தேசிய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்க டெல்லி காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 2 முதல் 16-ஆம் தேதி நள்ளிரவு வரை டெல்லி முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பல்வேறு சிறிய வான்வழி சாதனங்களைப் பறக்கவிட முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 163-ன் கீழ் டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் பிறப்பித்துள்ளார்.

இந்தத் தடையின் கீழ் ட்ரோன்கள், ட்ரோன் கேமராக்கள், குவாட்காப்டர்கள், ட்ரோன் அல்லாத சிறிய வான்வழி வாகனங்கள், பாராகிளைடர்கள், பாரா-மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், மைக்ரோலைட் விமானங்கள், ஹாட் ஏர் பலூன்கள் மற்றும் பாராசூட் குதித்தல் உள்ளிட்ட அனைத்து வகையான சிறிய வான்வழி செயல்பாடுகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மேற்காசியா பதற்றம் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம்!! முக்கிய ஆலோசனை!

உளவுத்துறை அமைப்புகள் வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக விரோதிகள் அல்லது தீவிரவாத அமைப்புகள் ட்ரோன்கள் போன்ற வான்வழி சாதனங்களைப் பயன்படுத்தி முக்கிய அரசு கட்டிடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தேசிய விழா நடைபெறும் பகுதிகளை குறிவைக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை மீறி ட்ரோன்கள் அல்லது பிற தடை செய்யப்பட்ட சாதனங்களை இயக்குபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 223-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தாக்குவது நியாயமா..? போராடிய மாணவர்கள்... தடியடி நடத்திய போலீஸ்..! சுப்ரீம்கோர்ட் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share