எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home!
எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்க, டில்லியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையைக் கடைப்பிடிக்க டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டும், உள்நாட்டில் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் நோக்கிலும் டெல்லி மாநில அரசு புதிய அதிரடி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் (Work From Home) முறையை வழங்குமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்கும் பொருட்டு, அனைத்துத் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்கனவே இந்த வாராந்திர 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இது தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!
டெல்லி அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுவது மட்டுமன்றி, டெல்லியின் பிரதானப் பிரச்சினையான காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களது பணி அட்டவணையை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!