இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!
நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
டெல்லியில் வாகனப் புகை மாசு அதிகரித்து வரும் நிலையில், அந்த நகர அரசு 2026-2030க்கான புதிய மின்சார வாகன கொள்கையை வகுத்துள்ளது. இந்த வரைவு அறிக்கையை பொதுமக்கள் கருத்துக்கு வைத்துள்ளது.
இந்தப் புதிய கொள்கையின் முக்கிய இலக்கு, 2028ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை படிப்படியாக தடை செய்வதாகும். வரும் 2028 ஏப்ரல் 1 முதல் புதிய பெட்ரோல் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் பதிவு செய்யப்பட மாட்டாது. இனி மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். 2027 ஜனவரி 1 முதல் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே புதிதாக பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
பள்ளி பஸ்களும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் பள்ளி பஸ்கள் மின்சாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கான வாகனங்களும் இனி மின்சார வாகனங்களாகவே கொள்முதல் செய்யப்படும்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க தாராள சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2.25 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார டூவீலர்களுக்கு முதல் ஆண்டில் 30,000 ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒரு கிலோவாட்டுக்கு 10,000 ரூபாய் என்ற அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
மின்சார ஆட்டோக்களுக்கு முதல் ஆண்டில் 50,000 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும். ‘என்1’ பிரிவு மின்சார சரக்கு வாகனங்களுக்கு முதல் ஆண்டில் 1 லட்சம் ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படும்.
பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கும் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். பி.எஸ்.4 டூவீலருக்கு பதிலாக மின்சார வாகனம் வாங்கினால் 10,000 ரூபாய், ஆட்டோவுக்கு 25,000 ரூபாய், 30 லட்சம் ரூபாய் வரையிலான பெட்ரோல் காருக்கு 1 லட்சம் ரூபாய், சரக்கு வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரை உதவி கிடைக்கும்.
மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு முழு விலக்கு கிடைக்கும். ஹைபிரிட் கார்களுக்கு 50 சதவீத விலக்கு மட்டுமே வழங்கப்படும்.
டெல்லி முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை அதிக அளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பேட்டரிகளை முறையாக மறுசுழற்சி செய்ய பேட்டரி சேகரிப்பு மையங்களும் உருவாக்கப்படும்.
இந்தப் புதிய கொள்கை மூலம் மின் வாகனத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதையும் படிங்க: கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!