எதிர்பாராத திருப்பம்.. ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த திமுகவின் அடுத்த நகர்வு..!!
திமுகவின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் தலைமையையும் ராகுல் காந்தியையும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியின் அரசியல் வட்டாரங்களில் தொகுதி மறுவரையறை மசோதா 2026 தற்போது முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அரசியல் காரணங்களால் முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் தள்ளிப்போடப்பட்ட இந்த மசோதாவை, வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் புதிய மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
தொகுதி மறுவரையறைக்கு திமுக தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பதே அவர்களின் முதன்மை அச்சமாக இருந்தது. இது தென்மாநிலங்களின் அரசியல் எடையைக் குறைத்து, வடமாநிலங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற கவலையும் இருந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய எம்பிக்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த 50 சதவீத உயர்வு அமலுக்கு வந்தால், நாட்டின் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-லிருந்து சுமார் 816 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் தமிழகத்தின் தற்போதைய 39 தொகுதிகள் 78 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்!
மேலும், தென்னிந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவ விகிதம் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்குத் தண்டனையாக அமையாமல், சமநிலையைப் பேணும் என்று கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், தமிழகத்தின் எதிர்கால அரசியல் வலிமை மற்றும் பிரதிநிதித்துவ உரிமையைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத தொகுதி உயர்வு என்ற நிபந்தனையுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்த நிலையிலும், பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடரும் சூழலிலும், மாநில நலனுக்கு முன்னுரிமை அளித்து முடிவெடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.
திமுகவின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் தலைமையையும் ராகுல் காந்தியையும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட வடமாநிலங்களில் எதிர்காலத்தில் தொகுதிகள் அதிகரிக்கும் போது, அது பாஜகவிற்கே சாதகமாக அமைந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கடினமாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இதனாலேயே காங்கிரஸ் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்தால், அது காங்கிரஸின் தேசிய அரசியல் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்று ராகுல் காந்தி அஞ்சுவதாகத் தெரிகிறது. தெற்கில் பலம் வாய்ந்த கூட்டாளியான திமுகவை எதிர்த்தது தவறோ என்ற எண்ணமும், நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிரான தங்களின் போராட்டம் இதனால் பின்னடைவைச் சந்திக்கும் என்ற கவலையும் காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதை சரிசெய்யவே தவெக வழியாக எம்பிக்கள் கூட்டத்தை நடத்த ராகுல் அழுத்தம் கொடுத்தார். இதற்காக விஜய் கூட்டமும் நடத்தப்பட்டது.
எப்படியாவது திமுகவை சமாதானப்படுத்த ராகுல் பிரயத்தனப்பட்டார். ஆனால் அதை திமுக கண்டுகொள்ளவே இல்லை. வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, இந்திய அரசியலிலும் கூட்டணிக் கணக்குகளிலும் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இந்த மசோதா நிறைவேறினால், மாநில உரிமைகள் விவாதத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!