×
 

“புடவை எடுக்கக்கூட புருஷனை நம்பியிருந்த பெண்களை...” - மகளிர் உரிமைத் தொகை குறித்து திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சை பேச்சு..!

நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்ற 3 ஆயுதங்களை கொண்டு தங்களை எதிர்க்கும் கட்சிகளை, பாஜக ஒடுக்கி வருவதாக திண்டுக்கல் லியோனி குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரை ஆற்றினார்.

திமுக தலைவர்களை புகழ்ந்து பாடல் பாடி திண்டுக்கல் லியோனி தமது பேச்சை துவங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் கை தட்டாத நிலையில், யாரும் கை தட்ட மாட்டேன் என்கிறீர்களே என கைதட்டலை லியோனி கேட்டு வாங்கினார். அன்ன நடை போட்டு கொண்டிருந்த பெண்களை எல்லாம் காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் வீர நடை போட வைத்த இயக்கம் திமுக எனவும், சாலையில் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது என அரசாணை பிறப்பித்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். சேலை எடுக்க வேண்டும் என்றாலும் கணவனை நம்பி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மாதந்தோறும் மகளிருக்கு 1000ரூபாய் வழங்கியது திராவிட மாடல் ஆட்சி என்றார். பிரதமர் மோடி எந்த இடத்தில் இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல நாடகம் போடுவார் எனவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரதமர் மோடி தேவாலயம் ஒன்றிற்கு சென்று அங்கு இயேசுவை வணங்கியது போல லியோனி நடித்து காட்டினார்.

மணிப்பூரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்திய போது பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்புகின்றனர் எனவும், முருகனை வணங்கும் இடத்திலும் பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்புவதை கண்டு முருகனே கண்ணீர் வடிப்பதாகவும், திருப்பரங்குன்றத்தில் இந்த மதக்கலவர கும்பலை ஒடுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஐயப்பன் சரண பாடலை பாடிய லியோனி அந்த பாடலில் வரும் வாபரை தொழுது ஐயப்பனை வணங்கிடுவோம் என்ற வரியை மேற்கோள் காட்டி மத நல்லிணக்கத்தை எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!

கல்வியை கொடுக்காமல் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நிலையில் அவர்களுக்கு கல்வியை கொடுத்தது திமுக என்றும், திமுக ஆட்சியில் 4.5 லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் அதிகளவு சேர்ந்துள்ளனர் என்றார். ஆதரவற்ற முதியோருக்காக பிரத்தியேகமாக முதல்வரால் அமைக்கப்பட்டது அன்புச் சோலை எனவும், தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000ரூபாய் வழங்கும் திட்டம் என்பது, குழந்தைகள் திமுகவிற்கு வாக்களிக்கும் என்பதற்காக கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். மகளிர் உரிமை தொகை என்பது தங்களுக்கான பணம் என பெண்கள் உரிமையோடு கூறி வருகிறார்கள் என்றும், கல்வியை பெண்களுக்கு கொடுத்து, அறிவு திருவிழா நடத்தியது திமுக அரசு என்றும், பெண்களுக்கு அழகு, ஆபரணம் மட்டுமே என்றும் நிரந்தரம் இல்லை எனவும், கல்வியையும், அறிவையும் யாராலும் திருட முடியாது, அது நிரந்தரமானது என்றும் நாட்டிலேயே பெண்கள் அதிகளவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகவும், அதிகளவு வேலைக்கு செல்லும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருவதாக தெரிவித்தார்.

நடிகர் என ஒருவர் தற்போது வந்துள்ளவரை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை எனவும், விளக்கின் மீது போர் தொடுக்க வந்த விட்டில் பூச்சி போல விளக்கிலே எரிந்து சாம்பலாகி விடுவார் என தெரிவித்தார். திராவிட முன்னேற்ற கழகம் நெருப்பு பிழம்பு எனவும், அதில் போட்டி போடும் விட்டில் பூச்சி போல அவர்கள் குறித்து பேசி மேடையை அவமானப்படுத்த விரும்பவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் என்றும், எடப்பாடி பழனிசாமியை விட்டுவிட்டு ஒவ்வொருவராக விலகி செல்வதை, நகைச்சுவை நடிகர் செந்தில் நகைச்சுவை காட்சியை ஒப்பிட்டு லியோனி தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்கலைக்கழகம் உருவானது குறித்து பாராட்டியவர் முதன்மைச்சர் ஸ்டாலின் என்றும், ஜெயலலிதா சமாதி கட்டியதற்கு கூட 6 கோடி பணத்தை கொடுக்காமல் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்த லியோனி, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி சவால் விடுத்துள்ளார் எனவும், ஆனால் அதையெல்லாம் எடுத்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்றும், அம்மா மினி கிளினிக்கில் பயன் பெற்றவர்கள் பட்டியலை கொடுக்க முடியுமா என லியோனி கேள்வி எழுப்பினார்.
 

இதையும் படிங்க: ஐ.எஸ்., முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! இது ஒரு துவக்கம் தான்!! ட்ரம்ப் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share