×
 

மக்களே தயாரா?... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000... பொங்கல் பரிசை அள்ளித் தர காத்திருக்கும் தமிழக அரசு...!

2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கினார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பொங்கலான 2022ம் ஆண்டில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவில்லை. அது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. ஆனால் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி 2025ம் ஆண்டு ரொக்கப்பணம் வழங்குவது நிறுத்தப்பட்டு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. 

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 3 மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இல்லத்தரசிகளை கவரும் நல்வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவிற்கே சவால்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தீர்மானம்...!

பொங்கல் பரிசு தொகுப்பில், ஒருவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு தொகை வழங்கலாம்; அதற்கு எவ்வளவு செலவாகும்; அந்தச் செலவை எப்படி ஈடுகட்டுவது என்பது தொடர்பாக சில தினங்களுக்கு முன், சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் தரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வழக்கம் போல், ஜனவரி மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மக்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 

இதையும் படிங்க: 2026 தான் TARGET... என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச் சாவடி பரப்புரையை தொடங்கும் திமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share