×
 

மு.க.ஸ்டாலின் போடும் கணக்கு! 2026-ல் யாருக்கு எவ்வளவு? 3 அணிகளிடம் ரகசிய பேச்சு!!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வரவும் ரகசிய பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை: வருகிற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் அவை வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் இடங்கள் ஒதுக்கினால் போதும் என்று முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆலோசனையை ஏற்று, திமுக 170 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 64 தொகுதிகள் வழங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், "திமுக தானே 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதற்கான கணக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார்" என்றனர்.

இதையும் படிங்க: ஒருத்தருக்கு 440 ஓட்டு டார்கெட்! தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் புது வியூகம்!!

கடந்த தேர்தலில் 25 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை 40 தொகுதிகளைக் கோருகிறது. ஆனால் திமுக தரப்பில், காங்கிரஸ் வென்ற 18 தொகுதிகளுக்கான இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதை ஏற்காமல் கூட்டணியை விட்டு வெளியேறினால் வெளியேறட்டும் என்ற கருத்தும் திமுகவில் நிலவுகிறது.

அதேநேரம், கூட்டணியை வலுப்படுத்த தேமுதிகவையும், பாமகவின் ராமதாஸ் அணியையும் இழுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தேமுதிகவுக்கு 8 தொகுதிகளும், பாமக ராமதாஸ் அணிக்கு 7 தொகுதிகளும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவர்கள் வந்தால் இரு தரப்புக்கும் சேர்த்து 8 தொகுதிகள் வழங்கப்படும் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கோரினால் அவற்றைச் சமாளிக்கவும் திமுகவிடம் திட்டங்கள் உள்ளன. தேவைப்பட்டால், திமுக போட்டியிடத் திட்டமிட்ட தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டை குறைத்துக்கொள்ளவும் ஸ்டாலின் யோசித்துள்ளார் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

இதையும் படிங்க: 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்!! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம்! தேர்தல் கமிஷன் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share