×
 

"பாமக யாருக்கு சொந்தம்?" சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம்! 'ஐயா தான் ஆணிவேர்' முழக்கத்தால் அதிரும் அரங்கம்!

சேலத்தில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் மாநிலச் சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலுக்கு இடையே, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. கட்சி தங்களுக்குத்தான் சொந்தம் என அன்புமணி தரப்பினர் உரிமை கொண்டாடி வரும் நிலையில், ராமதாஸின் இந்தப் பொதுக்குழு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் சேலத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் பாமகவின் மிக முக்கியமான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, மாநிலத் தலைவர் ஸ்ரீகாந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபகாலமாக பாமகவில் ‘அன்புமணி பிரிவு’ மற்றும் ‘ராமதாஸ் பிரிவு’ என இரு துருவங்கள் உருவாகியுள்ள நிலையில், “ராமதாஸ் நடத்தும் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது” என அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். ஆனால், தடைகளைத் தாண்டி திட்டமிட்டபடி இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் “ஐயா தான் ஆணிவேர்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மஞ்சள் பைகள் வழங்கப்படுகின்றன. அதில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், கடலை மிட்டாய் உள்ளிட்ட சிற்றுண்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: “அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; அவரை நீக்கியதே டாக்டர் ஐயா தான்!” - சேலத்தில் ஜி.கே.மணி அதிரடி!

நிர்வாகிகளுக்காகச் சைவ உணவுகள் பொதுக்குழு மண்டபத்திலும், சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு மண்டபத்தில் அசைவ உணவுகளும் மிகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற ‘மெகா’ அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் நடத்தப்படும் இந்த ‘அதிரடி’ பொதுக்குழு, பாமகவின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


 

இதையும் படிங்க: "நீக்கினா தவெக-தான்!" - இபிஎஸ்-ஸை கடுப்பேற்றிய மாஜி எம்.எல்.ஏ! செங்கோட்டையன் ஆசியுடன் விஜய் கட்சிக்கு தாவல்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share