×
 

"நீக்கினா தவெக-தான்!" - இபிஎஸ்-ஸை கடுப்பேற்றிய மாஜி எம்.எல்.ஏ! செங்கோட்டையன் ஆசியுடன் விஜய் கட்சிக்கு தாவல்?

ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் கோட்டையான சேலத்தில், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி சி. கிருஷ்ணன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை விதிகளை மீறிச் செயல்பட்டதாகச் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்துக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. பல்பாக்கி சி. கிருஷ்ணன் (முன்னாள் எம்.எல்.ஏ.) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் எடப்பாடியார் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட பல்பாக்கி கிருஷ்ணன், ஓமலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். நீண்ட காலமாகக் கழகத்தில் விசுவாசமாக இருந்த ஒரு மூத்த நிர்வாகி திடீரென நீக்கப்பட்டது சேலம் மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீமான் பொதுக்கூட்டத்தில் வாக்குவாதம்! வாலிபரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்..!!

இந்த நீக்கத்திற்கான பின்னணி குறித்து விசாரித்த போது, பல்பாக்கி கிருஷ்ணன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகவும், குறிப்பாகச் செங்கோட்டையனைச் சந்தித்துத் தவெக-வில் இணைந்ததாகப் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் கசிந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில், தளபதி விஜய்யின் தவெக கட்சி தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியிருப்பதும், பழைய நிர்வாகிகள் அணிமாறுவதும் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க: “அடிமை என்று சொல்பவர்கள் கண்ணாடியைப் பார்க்கட்டும்!” - முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share