பெட்ரோல் விலை லி.125 ரூபாயாக உயரும்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! E20 குறித்து முக்கிய விளக்கம்!
E20 பெட்ரோல் திட்டம் இல்லையெனில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்திருக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. எத்தனால் கலவை, விலை நிலைத்தன்மை மற்றும் FCI அரிசி குறித்த விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், E20 திட்டம் இல்லையெனில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்திருக்கும் என்றும், தற்போது ரூ.94.77 என்ற அளவில் விலை நிலைத்திருப்பதற்கு இந்தத் திட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் ரூ.13 ஆயிரம் வரை உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் எத்தனால் கலவை திட்டம் செயல்படுத்தப்பட்டதால் அதன் தாக்கம் நேரடியாக நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்பட்டதாக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் எத்தனால் கொள்முதல் செய்யப்படுவதால், சர்வதேச சந்தையின் விலை ஏற்ற, இறக்கங்களால் ஏற்படும் அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைப்பது, உள்நாட்டு விவசாய விளைபொருட்களுக்கு நிலையான சந்தையை உருவாக்குவது மற்றும் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்பதாகும். தற்போது நாட்டின் பல பகுதிகளில் E20 பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு! ரூ.100-ஐ தொட்டது டீசல்! விடிந்ததும் விடியாததுமாய் வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி!
மேலும், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவதன் மூலம் நுகர்வோருக்கு லிட்டருக்கு சுமார் ரூ.30 வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய அரிசி அல்லது இந்திய உணவுக் கழகத்தின் (FCI) அரிசி எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால் கடந்த 75 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான ஏற்ற, இறக்கங்கள் பதிவாகியிருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் விலை நிலைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை குறையும்? வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்?! பெட்ரோலிய அமைச்சர் சொல்வது என்ன?!