22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் மாதம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளைத் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்" (Special Intensive Revision - SIR) பணிகளை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) இந்தியத் தேர்தல் ஆணையர் இன்று அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பொதுவாக ஆண்டுதோறும் சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெறும். ஆனால், இந்த 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) என்பது சுமார் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும் ஒரு தீவிரமான களப்பணியாகும். கடைசியாக 2002-2004 காலகட்டத்தில் இது போன்ற பணி நடைபெற்றது.
முதற்கட்டமாகப் பீகார், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 22 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 2026 முதல் இந்தப் பணிகள் தொடங்க உள்ளன. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 22 இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ரவி நீரை நிறுத்தப்போகும் இந்தியா..!! தண்ணீரின்றி தவிக்கும் பாகிஸ்தான்..!! ஆட்டம் ஆரம்பம்..!!
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரில் சென்று வாக்காளர்களைச் சரிபார்ப்பார்கள். நீண்ட காலம் ஒரே இடத்தில் வசிக்காதவர்கள், இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயருள்ள வாக்காளர்களை நீக்குவது இதன் முக்கிய நோக்கமாகும். 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைத்தல்.
இந்தத் தீவிரத் திருத்தப் பணிகள் மூலம் சுமார் 40 கோடி வாக்காளர்கள் மறுசரிபார்ப்புக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கான ஆயத்த வேலைகளை இப்போதே தொடங்குமாறு மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல்களில் எவ்விதப் பிழையுமற்ற, தூய்மையான வாக்காளர் பட்டியலை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!