நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!
4 மாநிலங்களில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று முடிந்துள்ளன. இது சுதந்திரத்துக்குப் பிறகு ஒன்பதாவது முறையாக நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தமாகும், முந்தையது 2002-2004 காலகட்டத்தில் நடந்தது.பீகார் மாநிலத்தில் முதல்கட்டமாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட இப்பணி, இரண்டாம் கட்டமாக அக்டோபர் 27 அன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தபடி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 12 இடங்களில் தொடங்கியது.
இதில் சுமார் 51 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.இப்பணியின் முக்கிய நோக்கம் வாக்காளர் பட்டியலை துல்லியமாக்குவதும், தகுதியுள்ள அனைவரையும் சேர்ப்பதும், தகுதியற்றவர்களை நீக்குவதுமாகும். விரைவான நகரமயமாக்கல், மக்களின் இடம்பெயர்வு, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, ஒரே நபர் பல இடங்களில் பதிவு செய்திருப்பது போன்ற பிரச்னைகளால் வாக்காளர் பட்டியலில் தவறுகள் ஏற்படுவதைத் தடுக்கவே இத்தகைய தீவிர திருத்தம் அவசியமானது.
வட்டார நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்தனர். மூன்று முறை வீடுகளுக்குச் சென்று உறுதிப்படுத்தும் விதிமுறை பின்பற்றப்பட்டது. ஆதார், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்பணி முடிந்து டிசம்பர் 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.44 கோடியாக குறைந்தது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அதிக அளவு நீக்கங்கள் பதிவாகின. மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதையும் படிங்க: SIR... பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் வந்திருக்கு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...!
இந்த நிலையில் நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் நிக்கோபார் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட SIR பணிகள் முடிந்த நிலையில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: SIRக்கு பின்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் OUT..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!