நாங்க பாகுபாடு காட்டியது இல்ல... ராகுல் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்!
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய ராகுல் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ஆளும் மத்திய பாஜக அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டு இறந்த நிலையில் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சிகள் புகாரை தெளிவாக வரையறுத்துக் கூறுமாறு வலியுறுத்தினார். பீகாரில் SIR நடவடிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என கூறினார்.
இந்தியா கூட்டணியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், எங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவற மாட்டோம் என கூறினார். போலியான, உண்மைகளுக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், தாங்கள் வெளிப்படை தன்மையுடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் புகார் இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் கட்சிகளுக்கு இடையில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டியது இல்லை எனவும் தெரிவித்தார்.
வாக்குத்திருட்டு என்பது போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்பிற்கு அவமதிப்பானது என்றும் யார் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையில் இருந்து பின்வாங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார்? முழு விவரத்தை கொடுங்க... சுப்ரீம் கோர்ட் தடாலடி உத்தரவு!
வாக்காளர்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தியின் மீது தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர்கள் அரசியல் நோக்கத்திற்காக குறிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளையும் தாங்கள் சமமாக நடத்துவதாகவும் கூறினார். தவறான புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சவில்லை என்றும் பல கோடி வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், ஒரு கோடிக்கும் மேலான ஊழியர், 20 லட்சத்திற்கும் மேலான பூத் ஏஜெண்டுகள் இருக்கும்போது வாக்குகளை திருட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இந்திய வாக்காளர்களை குறி வைத்து அரசியல் செய்வதாகவும், எதற்கும் அஞ்சாமல் தேர்தல் ஆணையம் ஒரு பாறை போல் நின்றது என்றும் தொடர்ந்த நிற்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏழை, பணக்காரர், முதியவர், பெண்கள், இளைஞர், மதம், பிரிவு என தேர்தல் ஆணையத்திற்கு எந்த பாகுபாடும் இல்லை என்றும் கூறினார். வாக்காளர்கள் சிலர் இரண்டு இடங்களில் வாக்களித்ததாக கூறுவதாகவும் ஆதாரம் கேட்டால் எதிர்கட்சியினரிடம் பதில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கதவு எண் 791 என்ற சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டில் 46 வாக்காளர்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ஆதித்யா ஸ்ரீவத்சவா என்ற நபருக்கு மகாதேவ்புரா தொகுதியிலேயே இரண்டு பூத்களில் வாக்குகள் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். வீட்டின் 0 எனக் குறிப்பிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் இருப்பதாகவும் கடந்த தேர்தல்களில் 5 வழிகளில் வாக்குகள் திருடப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். கர்நாடகாவின் மகாதேவ்புரா தொகுதியில் ஒரு லட்சத்து 250 திருட்டு வாக்குகள் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் குர்கிராசிங் தாங் என்ற நபர் நான்கு பூத்களில் வாக்காளர் தகுதி பெற்றுள்ளார் என்றும் இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு..? இப்படியா பண்ணுவீங்க? ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் கேள்வி..!